`கேரள கவர்னரின் ஒரு ரோமத்தை தொட்டாலும், ஆட்சியைக் கலைக்க வேண்டும்!' - சுப்பிரமணியன் சுவாமி ட்வீட்

கேரளாவில் 9 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் யு.ஜி.சி விதிமுறைப்படி நியமிக்கப்படவில்லை எனவும், அவர்கள் 9 பேரும் ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் தடாலடி உத்தரவு பிறப்பித்திருந்தார். அதையடுத்து துணைவேந்தர்கள் கோர்ட்டுக்குச் சென்றனர். கவர்னருக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரம் உண்டு எனவும், கவர்னரின் கடிதத்துக்கு நவம்பர் 3-ம் தேதிக்குள் துணைவேந்தர்கள் விளக்கம் அளிக்க வேண்டும், தற்காலிகமாக பதவி விலக வேண்டாம் எனவும் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், கவர்னரை சீண்டும் விதமாக கேரள நிதி அமைச்சர் பாலகோபால், "உ.பி-யில் துணைவேந்தராக இருப்பவர்களுக்கு ஐம்பது முதல் நூறு செக்யூரிட்டி கார்டுகள் உண்டு. அங்குள்ள போரட்டக்காரர்களால் பிரச்னை ஏற்படும் என்பதால்தான் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கிருந்து வருபவர்களுக்கு கேரள பல்கலைக்கழகங்களின் விஷயங்களை புரிந்துகொள்ள முடியாது" எனப் பேசினார். "கவர்னர் பதவியின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படும் விதமாக அமைச்சர்கள் விமர்சித்தால் அமைச்சர் பதவியை திரும்பபெறும் நடவடிக்கை எடுக்கப்படும்" என ஏற்கெனவே கவர்னர் தெரிவித்திருந்தார்.

சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட்

இதைத் தொடர்ந்து பாலகோபால் நாட்டின் ஒற்றுமையை தகர்க்கும் விதமாகவும், கவர்னரை தவறாகப் பேசியதாகவும் கூறி அவரது அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும் என முதல்வர் பினராயி விஜயனுக்கு கடிதம் அனுப்பினார் கவர்னர் ஆரிப் முகமதுகான். `கவர்னர் சொல்லுவதுபோல நிதி அமைச்சர் எதுவும் சொல்லிவிடவில்லை. எனவே அமைச்சரை நீக்க வேண்டிய அவசியம் இல்லை' என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கவர்னர்-முதல்வரின் மோதலுக்கு இடையே ஆட்டத்தில் மூக்கை நுழைத்திருக்கிறார் பா.ஜ.க முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி.

கவர்னர் ஆரிப் முகமது கான், முதல்வர் பினராயி விஜயன்

சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியக் குடியரசுத் தலைவரையும் அதன் மூலம் அரசியலமைப்பில் மையத்தையும் கேரள ஆளுநர் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என்பதை கேரளாவின் கம்யூனிஸ்டுகள் உணரட்டும். ஆளுநரின் ஒரு ரோமத்தை தொட்டாலும், மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய மோடி அரசு தயாராக இருக்க வேண்டும்" என காட்டமாகப் பதிவிட்டிருக்கிறார். சுப்பிரமணியன் சுவாமியின் ட்விட்டர் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் கமெண்ட்டுகள் வந்தவண்ணம் உள்ளன.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/wc2iB0h

Post a Comment

0 Comments