சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில், நேற்று முன்தினம் 6 பேர் கொண்ட கும்பல் ஆளும் தி.மு.க கட்சி கொடி கட்டிய காரில் வந்திறங்கியது. அந்த விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த அந்த 6 பேரையும் பார்க்க பலரும் வந்து சென்றுள்ளனர். இதனால் அந்த தங்கும் விடுதி பரபரப்பாக காணப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த கார்கள் அங்கு வந்து செல்வதும், காரில் வந்தவர்கள் பரபரப்பாக எதையோ எடுத்துக்கொண்டு அறைக்குச் செல்வதுமாக இருந்தனர். எனவே அங்கு சட்டத்துக்கு புறம்பாக ஏதோ நடப்பதாக சந்தேகித்த அப்பகுதி மக்கள் கன்னியாகுமரி போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்த தங்கும் விடுதிக்கு கன்னியாகுமரி போலீஸார் சென்றனர். அப்போது பலர் அந்த விடுதியில் இருந்து எஸ்கேப் ஆனார்கள். விடுதி ஜன்னல் வழியாக ஒரு பேக் வெளியே வீசப்பட்டுள்ளது. அந்த பேக்கை தேடி கண்டுபிடித்த போலீஸார் அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.
அறையில் நடத்திய சோதனையில் பணம் பெறும்போது வழங்கப்படும் ஆவணங்களும், பத்துக்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் மற்றும் ரொக்க பணமாக சுமார் பத்து லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. பண பரிமாற்றம் குறித்து போலீஸார் விசாரித்தபோது, மதுரை மாவட்டம் திருமங்கலம் பேரையூர் பகுதியைச் சேர்ந்த சுந்தர பாண்டியன் என்பவர் தன்னை தி.மு.க பிரமுகர் எனக்கூறிக்கொண்டு வலம்வருவதாகவும், அவர் தன்னிடம் 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் 3 மாதத்தில் 5 மடங்காக மாற்றி 50 ஆயிரம் ரூபாயாக திருப்பிக் கொடுப்பதாகவும் சில புரோக்கர்களிடமும் கூறியுள்ளார்.
புரோக்கர்கள் கூறிய தகவலின் அடிப்படையில் பலமடங்கு பணம் கிடைக்கும் என்ற ஆசையில் பலர் பணத்தை அங்கு சென்று செலுத்தியது தெரியவந்துள்ளது. தி.மு.க பிரமுகர் எனக்கூறும் சுந்தரபாண்டியனையும், அவருடன் வந்த 6 பேரையும் பிடித்து கன்னியாகுமரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/yBrjUDq
0 Comments