ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் ஆந்திராவைச் சேர்ந்த க்யூபிஎம்எஸ் என்ற தனியார் நிறுவனம் சார்பில் 137 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் மருத்துவமனையில் தூய்மைப்பணி, காவல் பணி, நோயாளிகளை அழைத்துச் செல்லுதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு, அரசு நிர்ணயித்த ஊதியம் நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.703 வீதம் மாதத்துக்கு ரூ. 21 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால், ஒப்பந்த நிறுவனமோ நாள் ஒன்றுக்கு ரூ. 350க்கும் குறைவாக கணக்கிட்டு மாதத்துக்கு ரூ. 9 ஆயிரத்துக்கும் குறைவாகவே வழங்கி வருகிறது என்கிறார்கள். எனவே, அரசு அறிவித்தபடி ஊதியத்தை முழுமையமாக வழங்க வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓய்வு அறை, வார விடுமுறையும் வழங்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையருடன் பல கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைதொடர்ந்து தொழிலாளர் ஆய்வாளர் தலைமையில் சுகாதாரத் துறை துணை இயக்குநர், உறைவிட மருத்துவர் ஆகியோர் கொண்ட குழு மூலம் ஆய்வு நடத்தி, இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை வழங்குமாறு மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மேலாளருக்கு உத்தரவிட்டும் இன்னும், பழைய ஊதியத்தையே வழங்கி வருவதாகவும், தொடர்ந்து ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் தமிழ்நாடு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் சுந்தரமூர்த்தி குற்றம்சாட்டுகிறார்.
இதுகுறித்து சுந்தரமூர்த்தியிடம் நாம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது, ``இந்நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டு
மாவட்ட ஆட்சியர் மூலம் ஊதியம் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தத் தொழிலாளர்களுக்கு தொழிலாளர் சேமநல நிதி (பி.எஃப்.,), இஎஸ்ஐ, சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை, தேசிய விடுமுறை தினங்களுக்கு விடுமுறை, விடுமுறை நாளில் பணியாற்றினால் இரட்டைச் சம்பளம் போன்ற சலுகைகள் வழங்குவதாகக் கூறி தான் ஒப்பந்தம் போடப்படுகிறது. ஆனால், நடைமுறையில் இந்த சலுகைகள் எதுவும் வழங்கப்படுவதில்லை.
மாதத்துக்கு வரும் சம்பளத்தின் பெரும்பகுதியை பிஎஃப், இஎஸ்ஐக்கு பிடித்தம் செய்து கொள்கின்றனர். பிஎஃப் பிடித்தம் செய்யும் போது, ஒப்பந்த நிறுவனமும் அதை அளவு தொகையை செலுத்த வேண்டும் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதில்லை. அந்தத் தொகையையும் ஒப்பந்தத் தொழிலாளிகளிடம் இருந்தே பிடித்தம் செய்து கொள்கிறார்கள். இதனால் மிக சொற்ப அளவில் தான் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கிறது. இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை மருத்துவக் கல்லூரியாக இருந்தால் டீன், அரசு தலைமை மருத்துவமனையாக இருந்தால் சுகாதாரத் துறை துணை இயக்குநர், ஆர்எம்ஓ ஆகியோர் தான் கண்காணித்து முறையாக ஊதியத்தை பெற்று தருவதை உறுதிபடுத்த வேண்டும். ஆனால், அதிகாரிகள் யாரும் இதனை கண்டு கொள்வதாகத் தெரியவில்லை.
இதனால் ஈரோடு அரசு மருத்துவமனையில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி மருத்துவமனை முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்'' என்றார்.
இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் தமிழ்செல்வி கூறியதாவது, ``ஈரோடு அரசு மருத்துவமனையில் மொத்தம் 137 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகக் கணக்கு காட்டுகிறார்கள். ஆனால் உண்மையில் இங்கு 90 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். இவர்களில் சிலர் வெவ்வேறு அரசு மருத்துவமனைக்கு வெவ்வேறு பணிகளுக்காக அனுப்பி வைப்பதால் இங்குள்ள பணியாளர்களுக்கு கடும் பணிசுமை ஏற்படுகிறது. எனவே ஒப்பந்த ஊழியர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரையிலும் எங்களது இந்து காலவரையற்ற போராட்டம் நீடிக்கும்'' என்றார்.
இந்த போராட்டம் நீடிப்பதால் அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
from Latest News https://ift.tt/yCp8iqg
0 Comments