சுகேஷ் சந்திரசேகருக்கு நடிகைகளை சிறைக்கு அழைத்து சென்று அறிமுகம் செய்த பிங்கி இரானி கைது!

டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் சிவிந்தர் மோகன் சிங் மனைவி அதிதி சிங்கை மிரட்டி ரூ.205 கோடி பறித்ததாக கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த போது, பாலிவுட் நடிகைகள் பலரை சிறைக்கே வரவழைத்து பார்த்தான். அதோடு நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் நெருக்கமான நட்பும் ஏற்பட்டது. தன்னை சிறையில் பார்க்க வரும் நடிகைகளுக்கு பரிசுப்பொருள்களையும், பணத்தையும் சுகேஷ் வாரி வழங்கினான். மன்னனை சந்தித்து கவிதை வாசித்துவிட்டு பரிசு பெற்றுச்செல்லும் புலவர்களைப்போல் நடிகைகள் வந்து பரிசும் பணமும் வாங்கிச்சென்றனர். சுகேஷ் திகார் சிறையில் ஆடம்பரமாக வசிக்க சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்தான்.

சுகேஷ்

சுகேஷ் பாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகளை சந்தித்து பேசுவதற்கு பிங்கி இரானி என்ற பெண் தான் உதவி செய்து வந்தார். பிங்கி இரானி மூலம் தான் தன்னை சந்திக்க வரும் மாடல் அழகிகளுக்கு பணமும் கொடுத்தான் சுகேஷ் சந்திரசேகர். இவ்வழக்கில் அமலாக்கப்பிரிவு ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், இதில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுற்கு கோர்ட் நிரந்தர ஜாமீன் வழங்கி இருக்கிறது. இதில் பிங்கி இரானி மட்டும் இன்னும் கைது செய்யப்படாமல் இருந்த நிலையில் நேற்று டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் உட்பட பாலிவுட் நடிகைகள், மாடல் அழகிகளை சுகேஷுக்கு அறிமுகம் செய்தது பிங்கி இரானிதான் என்றும், சுகேஷை பெரிய தொழிலதிபர் போல் சித்தரித்து மாடல் அழகிகள் மற்றும் நடிகைகளை அழைந்து வந்து சிறையில் சந்திக்க வைத்ததாகவும் போலீஸ் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகேஷ் முக்கிய பிரமுகர்களை மிரட்டி பறிக்கும் பணத்தை பிங்கி இரானிதான் யாருக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் என்ற விபரத்தை கவனித்துக்கொண்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

சுகேஷ் சந்திரசேகர்

மும்பையை சேர்ந்த பிங்கியிடம் மிரட்டி பறித்த பணத்தை சுகேஷ் எங்கு வைத்திருக்கிறான் என்பது குறித்தும், வாங்கப்பட்ட சொத்துக்கள் குறித்தும் விசாரிக்கவேண்டியிருப்பதால் 4 நாள்கள் போலீஸ் காவலில் அனுப்பவேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டனர். போலீஸாரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதி சைலேந்தர் மாலிக், முக்கிய குற்றவாளி சுகேஷ் சந்திரசேகருடன் நேரடி தொடர்பு வைத்திருந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளதால் பிங்கியை வரும் 3ம் தேதி வரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டார்.



from Latest News https://ift.tt/oNym3ui

Post a Comment

0 Comments