ரயில் பாதை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட, 60 ஏக்கர் நிலத்திற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காததால், ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையத்தை ஜப்தி செய்ய, ராசிபுரம் நீதிமன்ற உத்தரவுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாரிகள் கால அவகாசம் கேட்டதால், விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள நம்பர் 3 குமாரபாளையம் கட்டடினாச்சம்பட்டி பகுதியில் கடந்த 1999 -ம் ஆண்டு ரயில் பாதை அமைப்பது என ரயில்வே தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதற்குரிய இடங்களில் இருந்த விவசாயிகளின் நிலங்கள் எடுக்கப்பட்ட நிலையில், இதுவரை அந்த நிலங்களுக்கான சுமார் ரூ. 10 கோடி மதிப்பிலான மதிப்பீட்டுத் தொகையை அரசு வழங்காததால் விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ராசிபுரம் ரயில் நிலையத்தை ஐப்தி செய்ய நீதிமன்றத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ராசிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் அமீனாவுடன் 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ரயில் நிலையத்தை ஐப்தி செய்ய வாகனத்துடன் வந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இது சம்பந்தமாக முறையான விளக்கம் தருவதாகவும், காவல்துறையில் புகார் கொடுத்து போலீஸார் உடன் வந்து ஐப்தி செய்யுமாறு அதிகாரிகள் தடுத்ததால், விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின்னர், கால அவகாசம் கேட்டதால், அதிகாரிகளுக்கு மதிப்பளித்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் நேற்று பரபரப்பான சூழல் நிலவியது.
from Latest News https://ift.tt/AKJUy8L
0 Comments