தமிழகத்தில் வடகிழக்கு பருபவமழை தீவிரமடைந்து வருகிறது. மழை ஒவ்வொரு பகுதியையும் பாதித்து வருவதால், இன்று இந்த மாவட்ட கல்வி நிலையயங்களுக்கு விடுமுறை, நாளை அந்த மாவட்ட கல்வி நிலையயங்களுக்கு விடுமுறை என்று அறிவிப்பு வந்துகொண்டிருக்கிறது. கரூரிலும் மழை பெய்தாலும், பள்ளி விடுமுறை விடும் அளவுக்கு இங்கு பெய்யவில்லை. ஆனால், கரூரில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் லேசான சாரல் மழையும், இரவு நேரத்தில் கனமழையும் பெய்து வருகிறது.
இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தேங்கி உள்ள மழை நீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அதே நேரம் தாந்தோணிமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கனமழை காரணமாக மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.
முழங்கால் அளவு மழை நீரில் நேற்று முந்தினமும், நேற்று காலையும் இப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ, மாணவிகள், ஆசிரிய பெருமக்கள் வந்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, இதுவரை தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், தேங்கியுள்ள மழை நீரில் அட்டை மற்றும் பூச்சிகள், பாம்பு உள்ளிட்டவை வெளியேறும் என்ற அச்சம் காரணமாக, நேற்று மதியத்திற்கு மேல் மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அளித்து அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரை விரைவில் மாநகராட்சி நிர்வாகம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இப்பள்ளியில் ஆசிரியர்களும், பயிலும் மாணவர்களும் அச்சத்தில் உள்ளனர். அதனால், இந்தப் பள்ளி வளாகத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே அப்புறப்படுத்துவதோடு, பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்காதவாறு செய்ய நிரந்தர நடவடிக்கை வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2tyWNmn
0 Comments