புதுக்கோட்டை: மாமனாரை சுட்டுக் கொன்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர்; சொத்துத் தகராறில் வெறிச்செயல்!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகேவுள்ள வடுகப்பட்டியைச் சேர்ந்தவர் சைவராஜ். இவரின் இரண்டாவது மகள் லதா. லதாவை, அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவருக்கு, சைவராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். ரவிச்சந்திரன் ராணுவ வீரர். 1991முதல் 2011 வரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கிறார். ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதால் உரிமம் பெற்று இரட்டைக் குழல் துப்பாக்கி ஒன்றை வைத்திருந்திருக்கிறார்.

ரவிச்சந்திரனுக்கு மனைவியைத் தவிர்த்து வேறு சில பெண்களுடன் திருமணம் மீறிய உறவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல், தன் மனைவிக்கு வரவேண்டிய சொத்தை தன்னுடைய மாமனாரிடம் கேட்டு பிரச்னையில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் லதா - ரவிச்சந்திரன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் லதா, அவர் தந்தை சைவராஜ் வீட்டுக்கு தன் குழந்தைகளுடன் சென்றுவிட்டார்.

இவர்களுக்குள் நடந்த குடும்பப் பிரச்னை நாளடைவில் நீதிமன்றம் வரையிலும் சென்றிருக்கிறது. குறிப்பாக, டைவர்ஸ் வரையிலும் சென்றிருக்கிறது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது.

கொலை

`மனைவி பிரிந்து சென்றது, சொத்துகளைப் பிரித்துத் தராதது, இதற்கெல்லாம் சைவராஜ்தான் காரணம், அவனை எப்படியும் சுட்டுக் கொல்லாமல் விடமாட்டேன்' என்று ரவிச்சந்திரன் வெளிப்படையாகவே கூறி வந்திருக்கிறார். உறவினர்களும், இது குறித்து கூறி ரவிச்சந்திரன் வைத்திருக்கும் துப்பாக்கியை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர். ஆனாலும், கொலைசெய்ய சந்தர்ப்பம் பார்த்து வந்த ரவிச்சந்திரன், சைவராஜ் வீட்டுக்கு அருகேயே வைத்து, இரட்டைக் குழல் துப்பாக்கியை சைவராஜின் தலையில் குறிபார்த்து சுட்டு அவரைப் படுகொலைசெய்தார். தடுக்க வந்த உறவினர் முருகேசன் என்பவரையும் துப்பாக்கிக் கட்டையால் திருப்பித் தாக்கியிருக்கிறார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சைவராஜின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த முருகேசனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அங்கிருந்து தப்பியோடிய ரவிச்சந்திரனைக் கைதுசெய்த போலீஸார், அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். சைவராஜ் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது

அப்போது பேசிய போராட்டக்காரர்கள், ``ரவிச்சந்திரன் அடிக்கடி துப்பாக்கியைக் காட்டி மக்களை மிரட்டியிருக்கிறான். குறிப்பாக அவன் எதிரியாகப் பார்த்த சைவராஜையும் மிரட்டியிருக்கிறான். துப்பாக்கியை பறிமுதல் செய்யக்கோரி பலமுறை அதிகாரிகளிடம்  மனு கொடுத்தாலும்,  நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி செய்திருந்தால், இந்த ஒரு உயிர் பறிபோயிருக்கிறது" என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதைத் தொடர்ந்து, போலீஸார் போராட்டக்காரர்களுடன்  பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/35BMPoZ

Post a Comment

0 Comments