தஞ்சாவூர்: ``மகள்களை வன்கொடுமை செய்துவிடுவோம் என மிரட்டுகின்றனர்” - ஐஜி அலுவலகத்தில் கதறிய பெற்றோர்

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகள் தமிழரசி. தமிழரசிக்கு அதேபகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன் 2019-ம் ஆண்டு திருமணம் நடந்திருக்கிறது. திருமணத்திற்குப் பிறகு பாலமுருகன் கூலி வேலைக்காக வெளிநாடு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் 2021-ம் ஆண்டு ஆகாஷ், விக்னேஷ் மற்றும் மணிகண்டன் ஆகிய மூன்று பேரும் தமிழரசிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுமைப்படுத்தி வந்திருக்கின்றனர். மூன்று பேரின் பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் மனமுடைந்து போன தமிழரசி, 2021 ஜூலை 3-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், ``ஆகாஷ், விக்னேஷ், மணிகண்டன் ஆகியோர் கொடுத்த பாலியல் தொந்தரவு தாங்க முடியாமல் தான் தற்கொலை செய்து கொள்கிறேன்'’ என தன்னுடைய இறப்புக்கு முன்பு கடிதம் எழுதி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐஜி அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல்

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட  மூவர் மீதும் இதுவரை போலீஸார் முறையாக வழக்கு பதிவு செய்யவில்லை எனச் சொல்லப்படுகிறது. அதையடுத்து உயிரிழந்த தமிழரசியின் பெற்றோர் மற்றும் உறவினர், திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குடும்பத்தினர், ``உங்களுடைய மகள் இறப்புக்கு நீதி கிடைக்க வழிவகை செய்கிறோம் எனச் சொல்லிவிட்டு, இன்றுவரை குற்றப்பத்திரிக்கை கூட முறையாக தாக்கல் செய்யாமல் இருக்கின்றனர். மேலும், ஜாமீனில் வெளியே வந்திருக்கும் 3 பேரும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர். என்னுடைய இரண்டு மகள்களையும் வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவிடுவோம் என வீட்டிற்கே வந்து மிரட்டுகின்றனர். என்னுடைய இரு மகள்களையும் ஏதாவது செய்துவிடுவார்கள் என்கிற உயிர்பயம் எங்களுக்கு இருக்கிறது’' எனக் குமுறினர்.

ஐஜி அலுவலகம் முன்பு நடைபெற்ற சாலை மறியல்

ஐஜி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த சாலை மறியலால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதற்கிடையே சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களை அப்புறப்படுத்த, ஐஜி அலுவலகத்தில் இருந்த போலீஸார் முயற்சி செய்தனர். அப்போது இருதரப்ப்புக்கும் இடையே சலசலப்பு உண்டானது. அதன்பிறகு, சம்பந்தப்பட்ட விவகாரத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் சமாதனப்படுத்தி மனுவை வாங்கி பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.  இதனால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.



from Latest News https://ift.tt/vsZ6B5T

Post a Comment

0 Comments