ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய இரண்டு காப்பீட்டு திட்டங்களை திரும்ப பெறுவதாக எல்.ஐ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய இரண்டு காப்பீட்டு திட்டங்களையும் 2019-ம் ஆண்டு எல்.ஐ.சி அறிமுகப்படுத்தியது. இந்த இரண்டு திட்டங்கள் மூலம் குறைந்த ப்ரீமியம் செலுத்தி அதிக தொகைக்கு ஆயுள் காப்பீடு செய்துகொள்ளும் வசதி இருந்தது. அதனால் இந்த திட்டம் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதில் டெக் டெர்ம் காப்பீட்டு திட்டத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே வாங்க முடியும். இதனால் காப்பீட்டு ஆலோசகருக்கான கமிஷன் தொகை மிச்சம். மேலும் இந்த காப்பீட்டு திட்டத்தின்கீழ் ரூ.50 லட்சத்திற்கான காப்பீட்டை ரூ.10,000-க்குள் பெற்று கொள்ளலாம்.
கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்தபோது பலர் உயிரிழந்தனர். இது பல காப்பீட்டு நிறுவனத்தின் லாபத்தை பாதித்தது. இதனால் பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் தங்களது டேர்ம் இன்ஷூரன்ஸ் பிரீமியக் கட்டணத்தை 40% வரை அதிகரித்தது. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் திட்டங்களின் பிரீமியக் கட்டணத்தை எல்.ஐ.சி நிறுவனம் உயர்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காப்பீட்டு நிறுவனங்களுக்கு காப்பீடு வழங்கும் ரீஇன்சூரர்கள் தங்களது பிரீமியக் கட்டணத்தை உயர்த்தினர். மேலும் ஜீவன் அமர் மற்றும் டெக் டெர்ம் ஆகிய இரண்டு திட்டத்திற்கும் இந்த தொகையில் காப்பீடு வழங்கினால் தங்களால் காப்பீடு வழங்க முடியாது என்று அவர்கள் தரப்பு கூறியுள்ளது. இதனால் மீண்டும் இந்த இரண்டு திட்டங்களும் புதிய பிரீமியக் கட்டணத்துடன் அறிமுகப்படுத்தப்படும். ஏற்கனவே இந்தத் திட்டத்தில் இருப்பவர்களுக்கு பழைய பிரீமியக் கட்டணமே தொடரும் என்று எல்.ஐ.சி வட்டாரம் கூறியுள்ளது.
from Latest News https://ift.tt/VXM9Cuc
0 Comments