நாய் கடித்ததை பெற்றோரிடம் கூறாமல் மறைத்த பள்ளிச் சிறுவன்; இறுதியில் உயிரைக் குடித்த அலட்சியம்!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேவுள்ள பெரிய கோவிலான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், அய்யாத்துரை. மாற்றுத்திறனாளியான அவர் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறார். தன் குழந்தைகளாவது நன்றாகப் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இரு மகன்களையும் படிக்க வைத்திருக்கிறார். மூத்த மகன் அஜித், சங்கரன்கோவிலில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-டூ படித்து வந்தார். மற்றொரு மகனான சுஜித், உள்ளூரிலேயே பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மூத்த மகன் அஜித், தினமும் அரசுப் பேருந்தில் பள்ளிக்குச் சென்று திரும்புவார். சில தினங்களுக்கு முன்பு பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் அவரை நாய் கடித்திருக்கிறது.

நாய் கடித்து உயிரிழந்த அஜித்

தன்னை தெருவில் சுற்றித் திரியும் நாய் கடித்த விவரத்தை சிறுவன் அஜித், பெற்றோரிடம் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். சில தினங்களுக்குப் பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கிறது. உள்ளூரிலேயே வைத்தியம் பார்த்த நிலையில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் சங்கரன்கோவிலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தபோது, தன்னை சில தினங்களுக்கு முன்பு நாய் கடித்த விவரத்தைத் தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நாய் கடிப்பதால் ஏற்படும் பாதிப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டதற்கு, ”நாய் கடித்துவிட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ஊசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். தெருநாய்களுக்கு ரேபிஸ் நோய்த்தொற்று இருந்தால் அவை கடித்ததும் மனிதர்களுக்கும் அந்த நோய் பரவும். அதனால் மிகவும் கண்காணிப்புடன் இருந்து தொடர்ந்து ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். நாய் கடித்தவர்கள் அலட்சியமாக இருந்தால் உயிரிழப்புகூட ஏற்படும் ஆபத்து இருக்கிறது” என்கிறார்கள். நாய் கடித்ததால், பள்ளிச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/aqlBJxZ

Post a Comment

0 Comments