மழையை தாங்கியதா சென்னை... களநிலவரம் என்ன?!

கடந்த ஆண்டு சென்னையில் பெய்த பெருமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடானது. சரிவர நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த மழைநீர் வடிகால்களால் சென்னையில் ஒரு வாரத்திற்கும் மேலாகப் பல இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்தது. அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாகச் சென்று பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின், "கூடிய விரைவில் சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதி கூறினார்.  அந்தவகையில், சென்னை மாநகராட்சியின் சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி 964 கி.மீட்டர் அளவு நடைபெற்று வருகின்றது.

தண்டையார்பேட்டை

மேலும், சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் இதற்காகத் தமிழக அரசு ரூ.277 கோடி ஒதுக்கீடு செய்தது. ஆனால், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் திட்டமிட்டபடி ஆரம்பிக்கப்படாமல் கடந்த ஜூன் மாதத்தில் தாமதமாக பணிகள்  ஆரம்பிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தது. தாமதமான மழைநீர் வடிகால் பணிகளால் இந்த ஆண்டும் சென்னை  கனமழையைத் தாங்குமா என்றும் கேள்வி எழுந்தது.  அதற்கேற்றார்போல் பல பகுதிகளில் சில குறையுடன் மழைநீர் வடிகால் பணிகள் நடந்தது.

அமைச்சர் கே.என்.நேருவோ, "சென்னையில் இந்த ஆண்டும் சிறிய அளவில் மழைநீர் தேங்கும்"  எனத் தெரிவித்திருந்தார். 

மணலி

இந்தநிலையில், தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. பருவமழையால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் கடந்த மாதம் 30-ம் தேதி முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில்  மழைவெள்ள பாதிப்புகளை  சரிசெய்ய மண்டலம் வாரியாக  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.  சென்னையில் கடந்த இரண்டு நாள்களாகவே கனமழை கொட்டித்தீர்க்கிறது. இதனால், தாழ்வான இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திரு.வி.க நகர்

புதிதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால்களும், இணைப்பு கால்வாய்  பணிகளும் இன்னும் முழுமை பெறாததால் சில பகுதிகளில் மழைநீர் செல்வதற்கு இடம் இல்லாமல் சாலைகளிலும், தெருக்களிலும் தேங்கி நிற்கிறது. மழைநீர் வடிகாலுக்கு அமைக்கப்பட்ட பள்ளங்களில் குளம்போல மழைநீர் தேங்கியுள்ளது. அந்தவகையில், வடபழனி நூறடி சாலை, பட்டாளம் மார்கெட் பகுதி, பெரம்பூர் பி.பி ரோடு, வில்லிவாக்கம் ஜெகநாதன் நகர், வியாசர்பாடி ஜீவா சுரங்கப்பாதை, எம்.எம்.கார்டன் ஸ்டீடபன் சாலை, முல்லை நகர், பெரம்பூர் ஜமாலியா பகுதிகளிலும் மழைநீர் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். 

ராஜாஜி நகர், திருவொற்றியூர்

பெரம்பூர் வாடியா நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது. இதேபோல், ஓட்டேரி நல்லா கால்வாய், திரு.வி.க நகர், கொளத்தூர் அஞ்சுகம் நகர், பூம்புகார் நகர், டீச்சர் கில்டு காலணி, செல்வி நகர், தில்லை நகர், அம்பேத்கர் நகர்,  திருவெற்றியூர்  ராஜாஜி நகர் பகுதிகளிலும் வெள்ள நீர் சூழ்ந்திருந்தது. மேலும், சென்னை மாநகராட்சியின் பராமரிப்பில் உள்ள 16 சுரங்கப்பாதைகளில் ரங்கராஜபுரம், கணேசபுரம்,  ஜீவா  சுரங்கப்பாதைகளில் மழைநீர் புகுந்ததால் போக்குவரத்து முழுமையாக தடைபட்டது. ராட்சத மோட்டார்களை கொண்டு தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர். 

ஆலோசனை கூட்டம்

இந்தநிலையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

அப்போது நிருபர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "மழைநீர் வடிகால் பணிகளால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவது  முழுமையாகத்  தடுக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிகால்கள் இல்லாத பகுதிகளில் மட்டுமே தற்போது தண்ணீர் தேங்கியிருக்கிறது. அதையும் முழுமையாக அகற்றுவதற்கு அதிக திறன்கொண்ட  மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. புளியந்தோப்பு, கொளத்தூர், திரு.வி.க நகர் பகுதிகளில் முழுவீச்சில் பணிகள் நடக்கிறது. 156 இடங்களில் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீரை அகற்றி வருகிறோம்" என்றார். 

சேகர் பாபு ஆய்வு

இதையடுத்து நேற்று மாலை கணேசபுரம், மாணிக்கம் நகர், ரங்கராஜபுரம், பகுதிகளில் சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த மழைநீர் முழுமையாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. திரு.வி.க நகர் பகுதியில் தேங்கிய மழைநீரை மேயர் பிரியா, அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர். இதேபோல், தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  வரும் 6ம் தேதி வரையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கனமழையால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேரமும் மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரம், குடிநீர் வழங்கல் துறை பணியாளர்கள் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.  மழைநீர் வடிகால் பணிகள் முடிவு பெறாத இடங்களில் மழை நீர் தேங்கியதை பார்க்க முடிந்தது. எனினும் அதில் பெரும்பாலான இடங்களில் மோட்டார் பம்ப் உதவுடன் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



from Latest News https://ift.tt/V3w7K9E

Post a Comment

0 Comments