பொன்னியின் செல்வனான தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜசோழன் பிறந்தநாளான சதய விழா இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோயிலை எழுப்பிய ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தவர். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரம் வரும் நாளை சதய விழாவாக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்த நிலையில் 1,037வது சதய விழா தஞ்சாவூர் பெரியகோயிலில் நேற்று மங்கள இசையுடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருப்பது பெரிய கோயில் ஆர்வலர்கள் மட்டுமின்றி பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதே நேரத்தில் ராஜராஜ சோழன் சதய விழா இதுவரை அரசு சார்பில் தானே கொண்டாப்பட்டு வந்தது என பலரும் கேள்வி எழுப்பியதுடன், அரசின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சமூகவலைதளங்கள் உள்ளிட்டவையில் கருத்து பரவியது.
இது குறித்து விவரம் அறிந்த சிலரிடம் பேசினோம், ``மாமன்னன் ராஜராஜ சோழன் சோழ பேரரசர்களில் சிறந்த ஆட்சி முறையை வெளிப்படுத்தியவர். மன்னர்கள் காலத்திலேயே மக்களாட்சி முறையினை கையாண்டவர். அவரால் எழுப்பப்பட்ட பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக வானுயர்ந்து நிற்பதுடன் தமிழர்களின் பெருமையை உலகம் முழுக்க பறைசாற்றி வருகிறது.
மழை நீர் சேகரிப்பு, விவசாயம், நீர் நிலைகள், மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைய வங்கி முறையை பின் பற்றி வணிகம் செய்வதற்கு நிதி வழங்குதல் என முக்கியத்துவம் கொடுத்து ஆட்சி நடத்திய ராஜராஜ சோழன் புகழ் போற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த அந்த நாள் சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இரண்டு நாள் நடைபெறும் சதய விழாவினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பார். மேலும் முக்கிய நிகழ்வான சதயவிழா தினத்தில் உள்ளூர் விடுமுறை விடப்படும். பெரியகோயில் அருகே அமைந்துள்ள ராஜராஜ சோழன் சிலைக்கு முதலில் மாவட்ட ஆட்சியர் மாலை அணித்து மரியாதை செய்வார். அதன் பிறகு பல்வேறு அமைப்புகள் மாலை அணிவிப்பார்கள்.
இந்த ஆண்டு நேற்று விழா தொடங்கிய நிலையில் அரசு ராஜராஜ சோழன் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. அரண்மனை தேவஸ்தானத்தை சேர்ந்த பெரிய கோயில் அறங்காவலரான பாபாஜி ராஜா பான்ஸ்லே ஒருங்கிணைப்பில் அறநிலையத்துறை, மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்பில் சதய விழா நடத்தப்படுவது வழக்கம்.
விழாவிற்கு தேவையான நிதி அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் வசூல் செய்யப்படும். அந்த நிதியின் மூலம் விழா நடத்தப்படுவது வழக்கம். அரசு சார்பில் இதற்காக தனியாக நிதி ஒதுக்குவது கிடையாது என சொல்லப்படுகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து வகையான ஒத்துழைப்பும் வழங்கப்பட்டு அறநிலையத்துறை மேற்பார்வையில் விழா நடைபெறுவதால் அரசு விழாவாக நடத்தப்பட்டதாக பலரும் கருதினர்.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின், ராஜராஜ சோழன் பிறந்த நாளான சதய விழாவை அரசு விழாவாக அறிவித்திருப்பதன் மூலம் விழாவிற்காக அரசே நிதி ஒதுக்கும். அத்துடன் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கொண்டாடப்பட்டு வந்த சதய விழா இனி தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும். அதற்காகவே அரசின் அறிவிப்பு பெரிதாக கவனத்தை பெற்றிருக்கிறது. இதில் வேறு குழப்பங்கள் கிடையாது” எனத் தெரிவித்தனர்.
இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் தரப்பில் பேசினோம், ``சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் அறிவித்திருக்கும் நிலையில், விழாவிற்கான நிதி கூடுதலாக அரசு சார்பில் ஒதுக்கீடு செய்யப்படும். அனைத்து துறை பணியாளர்கள் பங்களிப்புடன் விழா வெகு விமர்சையாக நடைபெறும்” என கூறப்படுகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/jRUveMQ
0 Comments