ஆதார் அட்டை இல்லையென சிகிச்சை மறுப்பு; இரட்டை குழந்தைகளுடன் கர்ப்பிணி பலியான அவலம்!

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கர்ப்பிணியிடம் ஆதார் அட்டை, கர்ப்பிணிகளுக்கு மாநில அரசு வழங்கும் அட்டை (Maternity Card) இல்லாததால் பிரசவம் பார்க்க மறுத்து வீட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டதால், கருவில் இருந்த இரட்டை குழந்தைகளுடன் தாயும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், துமகூரு மாவட்டம், துமகூரு, பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கஸ்தூரி (30). இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை பெங்களூருவில் கணவருடன் வசித்து வந்த நிலையில், 40 நாள்களுக்கு முன் இவரின் கணவர் தற்கொலை செய்துகொண்டார். கடும் துயருடன் கஸ்தூரி, துமகூருவுக்கு தனது 6 வயது பெண் குழந்தையுடன் புலம்பெயர்ந்தார். பாரதி நகரில் ஒரு குடிசையில் வசித்து வந்த கஸ்தூரி, வீட்டு வேலை செய்து ஜீவனம் செய்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு கடந்த புதன்கிழமை இரவு 8 மணியளவில் பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக, தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சரோஜாம்மாவின் உதவியுடன் துமகூரு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

கஸ்தூரி உயிரிழந்த வீட்டின் முன் கூடிய மக்கள்

இரவு 8.30 மணியளவில் கஸ்தூரியும், சரோஜாம்மாவும் மருத்துவமனைக்குச் சென்றபோது டாக்டர் உஷாவும், செவிலியர்கள் மூன்று பேரும் அங்கு இரவுப் பணியில் இருந்தனர். அப்போது பிரசவ வலியால் கஸ்தூரி துடித்துக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து பிரசவம் பார்க்குமாறு சரோஜாம்மா கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் பிரசவம் பார்க்க மாநில அரசால் வழங்கப்படும் ’தாய்’ கார்டு, ஆதார் கார்டு கட்டாயம். அந்த அட்டைகள் இல்லாததால் பிரசவம் பார்க்க அந்த டாக்டரும், நர்ஸ்களும் மறுத்துள்ளனர். பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த போதிலும் கொஞ்சம் கூட மனம் இறங்கவில்லை. சிகிச்சை அளிக்க மறுத்து, கஸ்தூரியை பெங்களூருவி்ல் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு கூறினர்.

ஆனால், பெங்களூரு செல்ல பணம் இல்லாததால் கஸ்தூரியும் சரோஜாம்மாவும், ’தயவுசெய்து பிரசவம் பாருங்கள்’ என்று கூறி கதறியுள்ளனர். அப்போதும் மனமிறங்காத டாக்டர் உஷா, கஸ்தூரியை அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டார். வேறு வழியின்றி இரவு 9.30 மணிக்கு கஸ்தூரியை அழைத்துக் கொண்டு தனது குடிசைக்கே திரும்பி விட்டார் சரோஜாம்மா.
வலியை பொறுத்துக் கொள்ளுமாறும், அடுத்த நாள் காலையில் மருத்துவமனைக்குச் சென்றுவிடலாம் என்றும் கஸ்தூரியிடம் கூறியவர், அதுவரை கஸ்தூரியின் குழந்தையை தன்னுடைய வீட்டில் வைத்துக்கொள்வதாகக் கூறி சென்றுவிட்டார்.

உயிரிழந்த கஸ்தூரி

கஸ்தூரிக்கு பிரசவ வலி அதிகமாகி, நள்ளிரவு சுமார் 1  மணியளவில் முதலில் ஆண் குழந்தை பிறந்தது. துணைக்கு யாரும் இல்லாத நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக இரண்டாவது குழந்தை பாதியில் பிறந்த நிலையிலேயே கஸ்தூரி உயிரை விட்டார். பிறந்த இரண்டு குழந்தைகளும் உயிரிழந்து விட்டனர். காலையில் சரோஜாம்மா வந்தபோது, மூன்று உயிரற்ற உடல்களையும் பார்த்துக் கதறியுள்ளார்.

மருத்துவரின் அலட்சியத்தால் மூன்று உயிர்கள் பலியானதை அடுத்து கோபமுற்ற மக்கள் துமகூரு அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டாக்டர் உஷா, மற்றும் மூன்று நர்ஸ்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். இதை தொடர்ந்து, மாவட்ட மருத்துவ அலுவலர் மஞ்சுநாத் உரிய சிகிச்சை அளிக்கத் தவறிய டாக்டர் உஷா, நர்ஸ்களான யசோதா, சவீதா, திவ்யபாரதி ஆகிய மூவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்த விஷயத்தை அறிந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர் நேரில் வந்து ஆய்வு நடத்தியதுடன், மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் நியமித்துள்ளார். இந்நிலையில், உயிரிழந்த கஸ்தூரியின் அக்கா மற்றும் உறவினர்கள் வந்து கஸ்தூரியின் சடலத்தை பெற்றுச் சென்றதாகவும்,  தற்போது கஸ்தூரியின் 6 வயது  குழந்தையை, அவரின்  அக்கா அழைத்துச் சென்று விட்டதாவும் மாவட்ட மருத்துவ அலுவலர் மஞ்சுநாத் நம்மிடம் தெரிவித்தார்.

ஆய்வு மேற்கொள்ளும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சுதாகர்

சரோஜாம்மா, ’பிரசவத்துக்கு அழைத்துச் செல்ல ஆட்டோவுக்கே பணம் இல்லாததால் கடன் வாங்கித்தான் ஆட்டோ பிடித்துச் சென்றோம். எங்களை பெங்களூருக்குப் போகச் சொன்னால் பணமில்லாமல் எப்படி போக முடியும்?’ என்று ஆற்றாமையுடன் தெரிவிக்கிறார்.

ஆதார் அட்டை இல்லாததால் கர்ப்பிணிக்கு பிரசவ சிகிச்சை மறுக்கப்பட்டு இரட்டை குழந்தைகளுடன் பலியான இந்த சோகம், நாட்டையே கலங்கச் செய்துள்ளது.



from Latest News https://ift.tt/ihXDYgC

Post a Comment

0 Comments