நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதியில் கடந்த 2016 - 21 வரை எம்.எல்.ஏவாக இருந்தவர் சந்திரசேகரன். அதோடு, அ.தி.மு.க கொல்லிமலை ஒன்றியச் செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அ.தி.மு.க நாமக்கல் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கும், இவருக்கும் கடந்த ஆட்சியில் ஏழாம் பொருத்தமாக இருந்தது. தனக்கு கீழ்படிந்து நடக்காமல், தன்னிச்சையாக நடக்கிறார் என்று சந்திரசேகரன் மீது, தங்கமணி கடுகடுப்பாய் இருந்ததோடு, சந்திரசேகரனை கட்சியில் ஓரங்கட்ட முயன்றதாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் சந்திரசேகருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதன் பின்னணியில் இருந்தது தங்கமணிதான் என்று சந்திரசேகரன் தரப்பு எள்ளும் கொள்ளுமாக வெடித்தது. தனது ஆதரவாளரான சந்திரன் என்பவருக்கு தங்கமணி சீட் பெற்றுக்கொடுத்தார். இதனால், கோபமான சந்திரசேகரன், 'தங்கணியா, நானா என்று பார்த்துவிடுகிறேன்' என்று கர்ஜித்தப்படி, சுயேச்சையாக களமிறங்கினார். இதற்கிடையில், அ.தி.மு.க தலைமை, கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக, சந்திரசேகரன் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் பதவியில் மட்டுமின்றி, கட்சியைவிட்டே கட்டம் கட்டி அறிவிப்பு வெளியிட்டது.
இதனால், தங்கமணி தரப்பு மகிழந்ததாக சொல்லப்பட்டாலும், இன்னொருபக்கம் சந்திரசேகரனோ அதற்கெல்லாம் அசரவில்லை. சுயேச்சையாக களமிறங்கிய அவர், பிரசாரத்தில், 'அடிமையாக என்னை வைக்க பார்த்த தங்கமணிக்கு நான் என்றும் அடிமையாக இருக்க முடியாது. எனக்கு ஏன் சீட் தரப்படவில்லை என்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய சேந்தமங்கலம் தொகுதிக்கு ரோடு போட வேண்டியிருக்கு. இந்நிலையில், எஸ்.சி.சி.பி.ஆர் திட்டத்தின் கீழ் ரோடு போட நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ. 22 கோடி நிதி வந்தது. 'எனது தொகுதிக்கு ரூ. 2 கோடியை தாங்க'னு அதிகாரிகள்கிட்ட கேட்டேன். அது தங்கமணி காதுக்குப் போனது. உடனடியாக மிரட்டல் தோரணையில், 'அதெல்லாம் கொடுக்க முடியாது. அந்த எம்.எல்.ஏவை முடிஞ்சதை பாத்துக்கச் சொல்லு'னு சொன்னார். அதனால்தான், எனக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது' என்று பேசினார்.
இந்நிலையில், சுயேச்சையாக தேர்தலை சந்தித்த அவர், 11,371 வாக்குகளை பெற்று, அ.தி.மு.க வேட்பாளர் சந்திரன், தி.மு.க வேட்பாளர் கே.பொன்னுசாமியிடம் 10,493 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்க காரணமாயிருந்தார்.
தொடர்ந்து, இதன் உள்விவகாரங்களை பற்றி அறிந்த சிலர் பேசும்போது, "உட்கட்சி பிரச்னைக்கு பிறக்கு தி.மு.கவுக்கு தாவ சந்திரசேகரன் முயன்றார். ஏனென்றால், சந்திரசேகரனும் லேசுப்பட்ட ஆளில்லை. பதவி கிடைக்கலன்னா, யாரையும் எதிர்ப்பார், எந்த கட்சிக்கும் தாவுவார்னு சொல்வாங்க. தி.மு.கதான் அவருக்கு பூர்வீகம். தி.மு.கவில் மாவட்ட துணை செயலாளராக இருந்தார். தி.மு.கவில் இருந்த சந்திரசேகன், கடந்த 1996 - 2011 வரை இதே சேந்தமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அதன்பிறகு, 2001 ல் கொல்லிமலை ஒன்றியச் சேர்மனானார். தொடர்ந்து, 2006-ல் அவருக்கு சேர்மன் சீட் மறுக்கப்பட, தி.மு.க தலைமை மீது முறுக்கிக்கொண்டு, சுயேச்சையாக களம் கண்டு, சேர்மனனானார். அதன்பிறகு, அ.தி.மு.கவில் இணைந்த அவருக்கு, 2011 ம் ஆண்டு அ.தி.மு.கவில் சேர்மன் பதவி தரப்பட, 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்தார். அதன்பிறகு, அவருக்கு கடந்த 2016-ல் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக சீட் கிடைத்தது. வெற்றியும் பெற்றார். அதோடு, கொல்லிமலை ஒன்றிய செயலாகவும் ஆனார். ஆனால், தனக்குள்ள செல்வாக்கை வைத்து தன்னிச்சையாக செயல்படும் இவரின் குணத்தால், அப்போது அமைச்சராக இருந்த தங்கமணிக்கும், இவருக்கும் எல்லா விசயத்திலும் ஆகாமல் போனது. நாமக்கல் மாவட்டத்தில் எல்லோரும் தனது ஆளுகையின் கீழ் இருக்க, சந்திரசேகரன் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்வது தங்கமணிக்கு பிடிக்கவில்லை.
அதனால், கட்டம் கட்டி, அவருக்கு கடந்த தேர்தலில் சீட் இல்லாமல் பார்த்துக்கொண்டார் எனச் சொல்லப்படுகிறது. இதனால், சுயேச்சையாக நின்று, சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.கவை தோல்வி அடைய வைத்த சந்திரசேகரன், அதன்பிறகு ஆளுங்கட்சியான தி.மு.கவில் இணைந்து தங்கமணியை கடுமையாக எதிர்க்க நினைத்தார். அதற்காக, பல ரூட்டுகளிலும் மெனக்கெட்டார். ஆனால், நாமக்கல் தி.மு.க கிழக்கு மாவட்ட செயலாளரான கே,ஆர்.என்.ராஜேஸ்குமார், 'தன்னிச்சையாக' செயல்படும் குணம் கொண்டவரான சந்திரசேகரன், தி.மு.கவுக்குள் வருவதை விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது. அதனால், தனது பவர்புல் 'லாபி' மூலம், தி.மு.கவுக்குள் வலதுகாலை எடுத்து வைக்க முயன்ற சந்திரசேகரன் முயற்சிக்கு, முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும், அசராத சந்திரசேகரன், 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்ற அடிப்படையில், தங்கமணி ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமியின் எதிர்முகாமில் இருக்கும் ஓ.பி.எஸ் அணியில் இணைந்து, தங்கமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார். இதில் தங்கமணிக்கு என்ன அதிர்ச்சி என்றுதானே கேட்கிறீர்கள். தான் மட்டும் போகாமல், அ.தி.மு.கவைச் சேர்ந்த உள்ளாட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் பலர் உள்ளிட்ட 200 பேர்களோடு ஓ.பி.எஸ் அணியில் இணைந்திருக்கிறார்.
'தங்கமணியை அரசியலில் ஒழித்துக் கட்டும்வரை ஓயமாட்டேன்'னு தனது ஆதரவாளர்களிடம் சூளுரைத்திருப்பதாக சொல்றாங்க. இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியில் இணைந்த சூட்டோடு சூடாக, சமீபத்தில் நடைபெற்ற ஓ.பி.எஸ் அணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய சந்திரசேகரன், ``சேந்தமங்கலம் தொகுதியில் அ.தி.மு.கவில் சரியான வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இதனால், அ.தி.மு.க ஒரு தொகுதியை இழந்தது. எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராக கூடாது என தெளிவாக செயல்பட்டவர், முன்னாள் அமைச்சர் தங்கமணி. இப்போது, ஓ.பி.எஸ் அணியில் ஏராளமான அ.தி.மு.கவினர் இணைந்து வருகின்றனர்.
அவரது கரத்தை வலுப்படுத்தும் வகையில், சேந்தமங்கலம், கொல்லிமலையைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட எடப்பாடி அணியினரை, ஓ.பி.எஸ் அணியில் இணைப்பேன்' என்று பேசி, தங்கமணிக்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறார். ஏற்கனவே, அ.தி.மு.க கோட்டையாக இருந்த நாமக்கல்லை, கடந்த தேர்தலில் மொத்தமுள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இரண்டை மட்டும் அ.தி.மு.க கைப்பற்றியன் மூலம், தி.மு.க கோட்டையாக விட்டுவிட்ட பரிதவிப்பில் தங்கமணி இருக்கிறார். இந்நிலையில், சந்திரசேகரன் வேறு ரிவெஞ்ச் எடுத்து, தன்னைப் பழிவாங்க பலரையும் அணி மாற்றி வருவதால், கலக்கத்தில் இருக்கிறார்" என்றார்கள்.
இதுகுறித்து, தங்கமணி தரப்பில் பேசினோம்.
"சந்திரசேகரன் ஒரு பச்சோந்தி. தனக்கு பதவி கிடைக்கலன்னா, எந்த எல்லைக்கும் போவார். தனக்கு பதவி கொடுத்த அ.தி.மு.கவுக்கு கடந்த தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் குழி பறித்தவர்தான் சந்திரசேகரன். தி.மு.கவுக்கு போக முயன்றவரை, தி.மு.கவுக்கு முன்பு அவர் செய்த துரோகத்தால், தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனால், 'நானும் ரெளடி'ங்கிற வடிவேல் பட டயலாக் போல், 'நாங்களும் அ.தி.மு.கவில் ஓர் அணியினர்' என்று சொல்லிக்கொள்ளும் ஓ.பி.எஸ் அணியில் சேர்ந்திருக்கிறார். அவர் பாட்சாவெல்லாம் எங்க அண்ணன்கிட்ட பலிக்காது" என்றார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/rMdlToC
0 Comments