கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டாலே ஐயப்ப பக்தர்கள் பலரும் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கிவிடுவார்கள். ஒரு மண்டல காலம் விரதம் இருந்து அவர்கள் சபரிமலைக்குச் சென்று ஐயனை தரிசித்து வருவார்கள். பொதுவாக மற்ற கோயில்களுக்குச் செல்வதற்கும் சபரிமலை செல்வதற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
பலரும் நினைத்துகொண்டாற்போல திருப்பதி, பழநி, திருச்செந்தூர், சமயபுரம் என்று தரிசனம் செய்யக் கிளம்பிவிடுவார்கள். அத்தலம் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் ஆசையை அந்த இறைவன் உண்டாக்கினால் உடனே கிளம்பிவிடுவோம். ஆனால் சபரி யாத்திரை அப்படியில்லை. அதற்கு ஐயப்பன் பக்தர்களின் பெயர் சொல்லி அழைத்தால் மட்டுமே சாத்தியம் என்கிறார்கள் பெரியோர்கள். இதுகுறித்து சாஸ்தா வியாசர் அரவிந்த் சுப்பிரமணியத்திடம் கேட்டோம்.
“அந்தக் கருத்துதான் ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கை. நாம் சபரிமலைக்குச் செல்லவேண்டும் என்றால் அதற்கு ஐயப்பனின் அருள் மிகவும் அவசியம். அவர் நம் பெயரைச் சொல்லி அழைக்காமல் நம்மால் அந்த சந்நிதானத்துக்குச் செல்லமுடியாது. அதுவும் ஒருமுறை அல்ல மூன்று முறை அவர் நம் பெயரைச் சொல்லி அழைக்க வேண்டும். முதல்முறை அவர் நம் பெயரைச் சொல்லி அழைக்கும்போதுதான் நாம் சபரியாத்திரை செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்கிறோம்.
இரண்டாம் முறை அவர் நம் பெயரை உச்சரித்த பிறகுதான் மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்குகிறோம். மூன்றாவது முறை அவர் நம் பெயரை உச்சரித்த பிறகுதான் நம்மால் இருமுடிகட்டி யாத்திரைக்கே புறப்பட முடியும் என்பது நம்பிக்கை. அவ்வாறு ஐயப்பனே நம் பெயரைச் சொல்லி அழைப்பதனால்தான் பக்தர்களும் தங்களின் சிரமம் பாராமல் யாத்திரை செல்கிறார்கள். அனைத்து கஷ்டங்களையும் சகித்துக்கொள்கிறார்கள். கல்லிலும் முள்ளிலும் நடந்து சந்நிதானம் செல்கிறார்கள்.
மற்ற சந்நிதானங்களுக்கும் சபரிமலை ஐயப்பன் சந்நிதானத்துக்கும் உள்ள வேறுபாடும் ஒன்று உண்டு. மற்ற கோயில்களில் நாம் தரிசனம் செய்யச் செல்வோம். இங்கோ மாலை அணிந்து விரதம் இருந்து ஐயனின் வடிவமாகவே வரும் பக்தர்களை தரிசனம் செய்ய ஐய்யன் காத்திருப்பாராம். அங்கே அவன் அமர்தருளும் திருக்கோலமும் சிறப்புவாய்ந்தது. சுவாமி ஐயப்பன் கைகளில் ஆயுதம் ஏதும் ஏந்தியிருக்கமாட்டார். யோக நிலையில் கைகளில் சின்முத்திரை காட்டியபடி அமர்ந்திருப்பார்.
சின் முத்திரை என்பது ஆள்காட்டி விரலும் கட்டை விரலும் சேர்ந்திருக்க மற்ற மூன்று விரல்களும் நிமிர்ந்திருக்கும் நிலை. ஆள்காட்டிவிரல் ஜீவாத்மா. அதோடு இணைந்திருக்கும் மற்ற மூன்றுவிரல்களும் ஆணவம், கண்மம், மாயை என்னும் மும்மலங்கள். அந்த மும்மலங்களையும்விட்டுப் பரமாத்மா என்னும் ஆள்காட்டி விரலோடு பரமாத்மா இணைந்திருக்கும் திருக்கோலமே சின்முத்திரை. இந்தச் சின்முத்திரையோடு ஐயப்பன் காட்சி தருகிறார். ‘நீயும் நானும் ஒன்றுதான்’ என்னும் விளக்கமே அங்கு, ‘தத்வமஸி’ என்று எழுதிவைக்கப்பட்டுள்ளது. இதுவே ஆதிசங்கர பகவத்பாதாள் உரைத்த அத்வைதத்தின் சாரம்
அதனால்தான் எத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஐயனின் அழைப்பை ஏற்று நாம் பயணம் செய்து தரிசனம் செய்ததும் அந்த கஷ்டங்கள் எல்லாம் மறைந்து மனதில் ஒரு நிம்மதி தோன்றிவிடும். அந்த நிம்மதி அடுத்த ஆண்டுமுழுவதும் நம்மோடு நிறைந்திருக்கும். அந்த ஆனந்தத்தைப் பெறுவதற்காகவே ஐயப்ப பக்தர்கள் மீண்டும் மீண்டும் சபரிமலை நோக்கிச் செல்கிறார்கள்” என்றார்.
from Latest News https://ift.tt/6S2COM8
0 Comments