கர்நாடகாவில் வரும், 2023 மே மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவை ஆளும் பா.ஜ., கட்சியினரும், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியினரும், ஆட்சிக்கட்டிலில் அமர கங்கணம் கட்டிக்கொண்டு, களத்தில் படு ‘பிஸியாக’ தேர்தலுக்கான பணிகளை துவங்கியுள்ளனர்.
ஒரு புறம் பா.ஜ.க.,வினர், கெம்பேகவுடா சிலை வைத்து ஒக்கலிகா சாதி ஓட்டுக்களை பெறவும், லிங்காயத்து சாதியினரை சந்தித்து ஆதரவு திரட்டவும், பட்டியலின மக்களின் ஆதரவை பெறவும் பல வகைகளில் ‘மாஸ்டர் பிளான்’களை வகுத்து தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர். மறுபுறம் காங்கிரஸ் கட்சியினரோ, தாங்கள் ஆட்சி செய்த காலத்தில் செய்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுடன், கர்நாடக பா.ஜ கட்சியினரின் ஊழல்களை ‘லிட்ஸ்’ -ஆக தொகுத்து, அதை மக்களுக்கு தெரியப்படுத்தி ஓட்டுக்களை பெற, தினமும் மக்களின் கவனம் தங்கள் மீதே இருக்கவேண்டுமென தீவிரமாக களப்பணி செய்கின்றனர். மறுபுறமோ ஜனதா தளம் (எஸ்) கட்சியினர், இரு கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் நடந்த, நடக்கின்ற ஊழல்களை மையப்படுத்தி, தேர்தலில் வெற்றி பெற காய் நகர்த்தி வருகின்றனர்.
பஞ்சரத்தின ரத யாத்திரை!
அடுத்த கட்ட நடவடிக்கையாக, ஆட்சிக்கு வந்தால் என்னென்ன செய்யப்போகிறோம், தேர்தலுக்கான வாக்குறுதிகள் எதைச்சார்ந்து இருக்கும், என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி ஓட்டுக்களை பெற, ஜனதா தளம் (எஸ்) கட்சித்தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி, ‘பஞ்சரத்னா ரத யாத்திரை’ இன்று (18–ம் தேதி) காலை தொடங்கினார்.
முன்னதாக தனது தந்தையான முன்னாள் பிரதமர் தேவ கவுடாவிடம் ஆசீர்வாதம் பெற்று, மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, ஆதரவாளர்களுடன் யாத்திரையை தொடங்கினார்.
கோலார் முல்பகல் தாலுகாவில் தொடங்கிய இந்த யாத்திரை, இரண்டு கட்டங்களாக, மொத்தமுள்ள, 224 சட்டசபை தொகுதிகளில், 126க்கும் மேற்பட்ட தொகுதிகளை ‘கவர்’ செய்து வாக்கு வங்கியை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த யாத்திரையை தேர்தல் வரையில் கொண்டு சென்று, தேர்தலுக்கான வலுவான தளத்தை கட்டமைக்கவும் திட்டமிட்டுள்ளார்.
ஐந்து வாக்குறுதிகளை முன்னிறுத்தி!
‘இலவச கல்வி, தரமான இலவச மருத்துவம், விவசாயிகளுக்கான மேம்பாட்டு திட்டங்கள், மாநிலத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பு மற்றும் அனைவருக்கும் வீடு’ என்பதை முன்னிறுத்தி யாத்திரையை தொடங்கியுள்ளார். யாத்திரையின் போதே ஒக்கலிகா சமூக தலைவர்கள், அந்த சமூகத்தை சேர்ந்த மக்கள், மேலும், குறிப்பாக பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களின் வாக்குக்களை பெற வியூகம் வகுத்துள்ளதாக, ஜனதா தளம் (எஸ்) கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு புறம் நாடு முழுவதிலும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த ராகுல் காந்தி ‘ஜோடோ யாத்திரை’ நடத்துகிறார், மறுபுறம் ‘பஞ்சரத்தின ரத யாத்திரை’ தொடங்கப்பட்டுள்ளது; பா.ஜ.க –வினரோ சிலைகள் திறப்பிலும், சமூக தலைவர்கள் மற்றும் மத குருக்கள் வாயிலாக ஓட்டுக்களை பெறுவதிலும் மும்முரமாக உள்ளனர். யாத்திரைகள் எந்த அளவுக்கு பலன் அளிக்குமென்ற கேள்விக்கு தேர்தலின் ‘ரிசல்ட்’ தான் பதில். எனினும் இந்த யாத்திரைகள், பா.ஜ கட்சியினருக்கு தேர்தலில் தலைவலியையும், களத்தில் ‘டப் பைட்’ சூழலை உருவாக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
from Latest News https://ift.tt/gfh6mwM
0 Comments