உத்தரப்பிரதேச மாநிலத்தில் தனியார் மருத்துவமனையில், சிறுநீரகக் கல் எடுக்கவேண்டி சிகிச்சை மேற்கொண்ட நபரிடம் கல்லை எடுப்பதாக மருத்துவர்கள் சிறுநீரகத்தை (Kidney) திருடியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அலிகார் நகரில் வசித்துவரும் 53 வயதான சுரேஷ் சந்திரா என்பவர், கடுமையான வயிற்றுவலி காரணமாக கடந்த ஏப்ரலில் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்கு அல்ட்ராசவுண்டு சோதனை செய்துபார்த்ததில், அவரின் இடது சிறுநீரகத்தில் கற்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது. அதையடுத்து உடனடியாக தனியார் மருத்துவமனை ஒன்றில், சிறுநீரகத்திலிருக்கும் கல்லை நீக்குவதற்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 29-ம் தேதியன்று மீண்டும் அடிவயிற்றில் வலியுணர்ந்த சுரேஷ் சந்திரா, அல்ட்ராசவுண்டு சோதனை செய்துபார்த்தபோதுதான், அவர் வயிற்றில் சிறுநீரகம் ஒன்று காணாமல் போன விஷயம் தெரியவருகிறது.
இது குறித்துப் பேசிய சுரேஷ் சந்திரா, ``அக்டோபர் 29 அன்று, அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டது. அதையடுத்து காஸ்கஞ்சில் உள்ள ஒரு மருத்துவரைப் பார்த்தேன். அவர் என் வயிற்றில் தையலைப்பற்றி விசாரித்துவிட்டு அல்ட்ராசவுண்டு சோதனை மேற்கொள்ளச் சொன்னார்.
பின்னர் என்வயிற்றில் ஒரு சிறுநீரகம் காணவில்லை என்பதைத் தெரிந்தபிறகு மிகவும் அதிர்ச்சியடைந்தேன். உடனடியாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு போன் செய்தேன். ஆனால் அவர்கள் சரியாகப் பதிலளிக்கவில்லை. இதுபற்றி மூத்த நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் தகுந்த நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்" என்று கூறினார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து, காஸ்கஞ்சில் உள்ள தலைமை வளர்ச்சி அதிகாரி அலுவலகம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டிருக்கிறது.
from Latest News https://ift.tt/8bAIH1O
0 Comments