Doctor Vikatan: சோயா உணவுகளை எல்லோரும் சாப்பிடலாமா?

Doctor Vikatan: சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றவையா? சோயாவை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்? சோயா சங்க்ஸ் ஆரோக்கியமானதா?

பதில் சொல்கிறார் பெங்களூரைச் சேர்ந்த கிளினிகல் டயட்டீஷியன் மற்றும் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட் ஸ்ரீமதி வெங்கட்ராமன்

ஸ்ரீமதி வெங்கட்ராமன்

சோயா உணவுகள் எல்லோருக்கும் ஏற்றவைதான். 2 வயதுக்குப் பிறகிலிருந்து எல்லோருக்கும் சோயா உணவுகள் கொடுக்கலாம். தைராய்டு குறைவாகச் சுரக்கும் ஹைப்போ தைராய்டு பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு மட்டும் சோயா உணவுகள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதுவும் தினமும் 30 முதல் 40 கிராம் அளவுக்கு தொடர்ந்து பல மாதங்களுக்கு எடுக்கும்போதுதான் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

சமீப காலமாக சோயா உணவுகள் பிரபலமாகி வருகின்றன. வீகன் உணவுக்காரர்கள் அதிகரித்ததன் விளைவாக பலரும் பால் உணவுகளையும் பனீர் போன்றவற்றையும் சாப்பிடுவதில்லை. எனவே தாவர அடிப்படையிலான புரதம் என்று பார்த்தால் வேகவைத்த சோயாவில் (100 கிராம் அளவில்) 18 கிராம் புரதம் இருக்கிறது.

நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. அதாவது 100 கிராம் சோயாவில் 6 கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்தைப் பெற சோயா சிறந்த உணவு.

சோயாவில் ஃபைட்டோஈஸ்ட்ரொஜென் என்கிற தாவர ஈஸ்ட்ரோஜென் உள்ளது. எனவே மெனோபாஸ் அறிகுறிகள் உள்ளோருக்கு சோயா உணவுகள் சாப்பிடச் சொல்வார்கள். புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கும்.

'இரிடபுள் பவல் சிண்ட்ரோம்' (Irritable bowel syndrome) எனப்படும் பாதிப்பு உள்ளவர்களில் சிலருக்கு இது ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். அவர்களுக்கு இந்த உணவானது வயிற்று உப்புசத்தையும் அசௌகர்யத்தையும் ஏற்படுத்தலாம்.

சோயா உணவு

'எடமாமே' (Edamame) என ஒன்று கிடைக்கிறது. இது பச்சை சோயா. இதை அப்படியே வேகவைத்துச் சாப்பிடலாம். இதன் உள்ளே உள்ள விதைகளைத்தான் நாம் பயன்படுத்துகிறோம். பெரிய நட்சத்திர ஹோட்டல்களில் புரோட்டீன் ஸ்நாக்ஸாக இது விற்கப்படுகிறது.

சோயாபீன் ஆயில் கிடைக்கிறது. சோயாவைப் புளிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிற 'டெம்பே' (Tempeh) கிடைக்கிறது. பனீரை போலவே இதைப் பயன்படுத்தலாம். டோஃபு என்ற பெயரில் சோயாவிலிருந்து பெறப்படும் பனீர் கிடைக்கிறது. சோயா சங்க்ஸ் கிடைக்கின்றன. சோயா மாவு கிடைக்கிறது. கொலஸ்ட்ரால் அதிகமுள்ளோர், வாரத்துக்கு மூன்று நாள்களுக்கு 3 கப் கோதுமைக்கு ஒரு கப் சோயா மாவு வீதம் கலந்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.

லாக்டோஸ் இன்டாலரன்ஸ் எனப்படும் பால் உணவுகள் ஒவ்வாமை உள்ளவர்களால் பால் மற்றும் பால் உணவுகளைச் சாப்பிட முடியாது. அவர்களுக்கு சோயா மில்க் வரப்பிரசாதம். சோயா சாஸ் கிடைக்கிறது. இதில் சோடியம் அதிகம் என்பதால் அடிக்கடி உபயோகிக்க வேண்டாம். மற்றபடி சோயாவில் ஏராளமான உணவுகள் கிடைக்கின்றன. விதம்விதமாகப் பயன்படுத்தலாம். சிலருக்கு சோயா உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அவர்களும் இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/eU0YMgb

Post a Comment

0 Comments