"ஜனவரி முதல் ஏழை குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை”- புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுவை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்க முடிவு செய்துள்ளோம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், லேப்டாப் ஆகியவையும் ஜனவரி முதல் வழங்கப்படும். பால் உற்பத்தியாளர்கள் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

புதுச்சேரி அரசு

அதை ஏற்று பால் கொள்முதல் விலை ரூ.34-லிருந்து ரூ.37 ஆக உயர்த்தியுள்ளோம். இன்று முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. வழக்கமாக பாலுக்கான ஊக்கத்தொகை ஆண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த தொகையை மாதந்தோறும் 5 சதவிகிதம் வழங்க இருக்கிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன்கார்டுக்கும் ரூ.470/- மதிப்புள்ள பொங்கல் பொருள்கள் வழங்கப்படும். அதற்காக ரூ.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பொங்கல் பொருள்களுடன் மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1,200/-ம்,  சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,400/-ம், 4 மாத இலவச அரிசிக்கான ரொக்கப்பணம் வங்கியில் செலுத்தப்படும்.

ஓராண்டில் எங்கள் அரசு சிறப்பாக செயல்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கி பல பணிகளை செய்துள்ளோம். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மக்களுக்கும் நிவாரணம் வழங்கியுள்ளோம். மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளோம். சுற்றுலாப் பயணிகளின் வருகை புதுவையில் அதிகரித்துள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் உயர்ந்துள்ளது. அதேபோல அறிவித்த அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த உள்ளோம்.

2021-22-ம் ஆண்டு கால்நடை தீவன மானியத்தொகை ரூ.4.50 கோடி வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மத்திய அரசு மாநில அந்தஸ்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. மாநில அந்தஸ்தை போராடித்தான் பெற வேண்டும். வரும் சட்டமன்றக் கூட்டத்திலும் மாநில அந்தஸ்து வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவோம். பிரதமர், ஜனாதிபதியை எம்.எல்.ஏ-க்களோடு சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.



from Latest News https://ift.tt/cgGUYT4

Post a Comment

0 Comments