மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக குற்றாலம், பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் கடந்த இரு தினங்களாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. மூன்றாவது நாளான இன்று வெள்ளம் குறைந்திருந்ததால் பயணிகளை குளிக்க அனுமதித்தனர்.
பழைய குற்றாலம் அருவியிலும் நீர் வரத்து அதிகம் இருந்தது. ஆனாலும் பயணிகள் பாதுகாப்புடன் குளிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் குடும்பத்துடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஆர்ப்பரித்துக் கொட்டிய அருவியில் ஆனந்தமாகக் குளித்து மகிழ்ந்தனர்.
பழைய குற்றாலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பயணிகளில் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரும் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தார். குடும்பத்தினர் அனைவரும் ஆனந்தமாக நீராடிக் கொண்டிருந்த நிலையில் நான்கு வயது சிறுமியான ஹரிணி மட்டும் அருவியிலிருந்து விழும் தண்ணீர் தேங்கிய ஓடையில் விளையாடியுள்ளார்.
நீர்வரத்து அதிகம் இருந்ததால் ஓடையில் இருந்து தண்ணீர் பாய்ந்து சென்று வெளியேறும் துவாரத்தில் நீரின் இழுப்பு அதிகம் இருந்துள்ளது. அதில், சிக்கிய சிறுமி அந்த துவாரத்தின் வழியாக இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீர் செல்லும் ஆபத்தான பாறைகளுக்குள் சென்றுவிட்டார். அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பதறிக் கத்தியதால் பெற்றோரும் பதறி ஓடி வந்துள்ளனர
அதற்குள்ளாக சிறுமி பாறையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அருவியில் குளிப்பதற்காக வந்திருந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் தனது உயிரையும் துச்சமாக மதித்து ஆபத்தான பாறைகளில் இறங்கிச் சென்று நீரோட்டத்தில் சிக்கியிருந்த சிறுமியை மீட்டார். அதற்குள் அங்கு பதறியபடி ஓடிவந்த சிறுமியின் தாய், குழந்தையைப் பெற்றுக் கொண்டார். குழந்தைக்கு தென்காசியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களை எல்லாம் சுற்றுலாப் பயணி ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த நிலையில், தன் உயிரைப் பணயம் வைத்து பழைய குற்றாலம் அருவிக்கு அருகில் உள்ள ஆபத்தான பாறைகளில் வேகமாக இறங்கிச் சென்று குழந்தையைப் பத்திரமாக மீட்ட இளைஞர் விஜயகுமாருக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/gTOIXSj
0 Comments