தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமாக, விரைவு போக்குவரத்துக் கழகம், சென்னை மாநகர், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கோட்டங்கள் அமைத்திருக்கிறது. இதன் மூலமாக சாதாரண, டீலக்ஸ், ஒன் டு ஒன், ஏசி வசதி கொண்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பொதுமக்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வருகிறார்கள்.
கடந்த 2021-22-ம் ஆண்டில் அரசுப் பேருந்துகளில் நாள்தோறும் பயணம் செய்வோரின் எண்ணிக்கை 1.21 கோடியாக இருந்தது. பிறகு சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இலவசத் திட்டத்தின் மூலமாகப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. அதாவது நடப்பு 2022-ல், நாள்தோறும் 1.55 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்து வருகிறார்கள். இவ்வாறு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்காமல் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அரசுப் பேருந்துகளில் தானியங்கி கதவு மூடும் அமைப்பு பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் பணியின்போது செல்போன் பயன்படுத்துவதற்கும், மது அருந்துவதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அடிக்கடி விபத்துகள் நடக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, அதை சரி செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் அரசுப் பேருந்துகள் விபத்தில் சிக்குவதும், அதனால் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாக இருக்கிறது.
இதில் சென்னையில் அதிக அளவு விபத்துக்கள் நடந்து வருகின்றன. இது குறித்து சமூக ஆர்வலர் அன்பழகன் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் எழுப்பிய கேள்விக்கு எம்.டி.சி நிர்வாகம் அளித்திருக்கும் பதிலில், "கடந்த 1.1.21 முதல் 30.9.22 வரை மொத்தமாக 1,056 விபத்துக்கள் நடந்திருக்கின்றன. இதில், மொத்தமாக 103 உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன" என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து நம்மிடம் பேசிய அன்பழகன், "அரசுப் பேருந்துகளை இயக்கம் ஓட்டுநர்கள் விபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பணிக்கு வருவது இல்லை. மேலும் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு நிர்வாகம் தொடர்ந்து கவுன்சலிங் கொடுத்து வருகிறது. மேலும் தனியாக வகுப்புகளும் எடுக்கிறார்கள். அதிக அளவு விபத்துகள் ஏற்படுவதற்கு சிக்னல் விதிமுறைகளை கடைப்பிடிக்காதது முக்கிய காரணம்.
குறிப்பாக வளைவுகளில் அரசுப் பேருந்துகளை முந்திச் செல்ல முயற்சி செய்வதால் விபத்துகள் நடக்கின்றன. சைதாப்பேட்டையில் சமீபத்தில் ஒரு விபத்து நடந்தது. அதில் சம்பந்தப்பட்ட வாகன ஓட்டி பள்ளம் இருப்பது தெரியாமல் முந்த முயற்சி செய்யும்போது, அரசுப் பேருந்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். இதேபோல் கடந்த மாதம் வடபழனியில் இருக்கும் மேம்பாலத்தில் ஒரு விபத்து நடந்திருக்கிறது.
முறையாக ஓட்டுநர் உரிமம் பெறாமலும், தலைக்கவசம் அணியாமலும் பயணிக்கிறார்கள். மேலும் சென்னையில் மெட்ரோ பணிகள் அதிக இடங்களில் நடக்கின்றன. ஆட்டோக்களும் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. எனவே விபத்து நடக்கும் இடங்களில் கிடைக்கும் வீடியோ பதிவை சேகரித்து, அவற்றை ஓட்டுநர்களை நிர்வாகம் பார்க்க செய்ய வேண்டும்.
அப்போது அவர்களுக்குச் சம்பந்தப்பட்ட சாலைகளில் பயணிக்கும்போது எவ்வாறு பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலும் ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. இதனால் கூடுதல் நேரத்திற்கு வாகனத்தை இயக்க வேண்டிய நிலைக்கு ஓட்டுநர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். எனவே அவர்களின் பணிச்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
from Latest News https://ift.tt/Hv30wzr
0 Comments