``குற்றவாளியிடமிருந்து தகவல் வராதபோது, உடல்ரீதியாக துன்புறுத்துவோம்!" - வால்டர் தேவாரம்

சென்னை எழும்பூரில் போலீஸ் மெஸ் இருக்கிறது. இங்கு தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி எழுதிய `42 mondays', `Enkindling the endorphins of endurance', `future of policing' ஆகிய மூன்று புத்தகங்களின் வெளியீட்டு விழா கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வால்டர் தேவாரம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயந்த் முரளி, "இந்தப் புத்தகங்களை எழுத மற்றும் வெளி கொண்டு வர எனக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தது என் மனைவி மற்றும் எனது நண்பர்கள்தான். மாரத்தான் ஓடுவதும் உடற்பயிற்சி செய்வதும் என்பதும் காவல் அதிகாரியாக மட்டுமல்லாமல் தனிநபராகவும் என் உடல் நலனைப் பேண உதவியாக இருக்கிறது. சைலேந்திரபாபு உடல் நலத்தைப் பேணுவதில் மிக ஆர்வம் கொண்டவர்" என்றார்.

ஜெயந்த் முரளி

பின்னர் பேசிய வால்டர் தேவாரம், "எங்கள் காலத்தில் விசாரணை என்றால்... குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பது, அவர்களிடமிருந்து விவரங்களை வாங்குவது தான். அதற்கான முறைகள் எங்களிடமிருந்து ஒன்றே ஒன்றுதான். அது குற்றவாளியிடமிருந்து தகவல் வராத நிலையில், உடல்ரீதியான துன்புறுத்தல்களைச் செய்வதுதான்.

அப்போதுதான் அவர்களிடமிருந்து களவு போன பொருளோ அல்லது தகவல்களோ வாங்க முடிந்தது. இது குற்றங்களைக் குறைப்பதற்கே... ஆனால் இப்போது குற்றவாளிகள் மிகவும் புத்திசாலிகளாக மாறிவிட்டனர். அதற்கேற்றபடி காவல்துறையினரும் அவர்களைவிட புத்திசாலிகளாக மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சைபர் குற்றங்கள் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து வருகின்றன. இதனைப் பற்றிய ஒரு விரிவான புத்தகம்தான் `42 மன்டேஸ்' " என்றார்.

வால்டர் தேவாரம்

மேலும் அவர், ``காவல்துறையினர் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சமூக குற்றங்களைக் குறைக்க வேண்டும். இந்த புத்தகத்தில் குற்றவாளிகளுக்கு ஈடாக காவல்துறையினர் புத்திசாலித்தனமாகச் செயல்படுவது பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது" என்றார்.

பின்னர் பேசிய சங்கர் ஜிவால், "ஒரு புத்தகத்தை அதன் அட்டையைப் பார்த்து எடை போடாதே என்று கூறுவார்கள். ஆனால் அதற்கு மாறாக நான் கூறுகிறேன் ஒரு புத்தகத்தை அதன் அட்டையைப் பார்த்து எடை போடலாம். ஜெயந்த் முரளி ஒரு சிறந்த படைப்பாளி. புத்தகத்தில் அவர் தொழில்நுட்ப மேம்பாட்டினை காவல்துறையில் பயன்படுத்தி குற்றங்களை எவ்வாறு குறைப்பது என்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தார்" என்றார்.

சங்கர் ஜிவால்

மேலும் பேசிய அவர், "இவர் எழுதிய பல்வேறு புத்தகங்கள் வெற்றி புத்தகங்கள். இவருடைய புத்தகத்தைத் தயவு செய்து வாங்கி படியுங்கள். இந்த புத்தகம் சைபர் க்ரைமில் உள்ள தொழில்நுட்ப மேம்பாட்டினை பற்றி பல்வேறு விதங்களில் விவரித்துள்ளது. குற்றங்களைக் கட்டுப்படுத்துவது பற்றியும் சட்ட ஒழுங்கு பற்றியும் அதில் உள்ள தொழில்நுட்ப வளர்ச்சி பற்றியும் கூறியுள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய சைலேந்திர பாபு, "ஜெயந்த் முரளி எழுதிய புத்தகத்தை வெளியிடுவது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. நானும் ஜெயந்தி முரளியும் ஒரே கல்லூரியில் படித்தோம். அவர் ஒரு முழு நேர மாரத்தான் ஓட்டக்காரர். அவர் எப்போதும் அவர் செய்வதை மட்டுமே எழுதுவார்" என்றார்.

சைலேந்திர பாபு

மேலும் அவர், "இந்த புத்தகத்தில் சகிப்புத்தன்மை மற்றும் உடல் பயிற்சி பற்றி அவர் பேசுவது மிக பரிச்சயமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் இவர் 12 வாரங்கள் மாரத்தானுக்காகப் பயிற்சி எடுத்தவர். அது மிகவும் கடினமான ஒன்று. நடக்க பழகுங்கள். உடல் நன்றாக இருந்தால் அதுவே நமக்கு ஒரு நல்லொழுக்கத்தையும் சுயமரியாதையும் கொடுக்கும்" என்றார்.



from Latest News https://ift.tt/ZKlBFTe

Post a Comment

0 Comments