``18 மாத திமுக ஆட்சியின் ஒரே சாதனை, உதயநிதியை அமைச்சராக்கியதுதான்" - ஆர்.பி.உதயகுமார்

தி.மு.க அரசுக்கு எதிராக உசிலம்பட்டியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசும்போது, "தி.மு.க ஆட்சியில் 150 சதவிகித சொத்து வரி உயர்வு, மின் கட்டணம், பால் விலை  உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வினால், மக்களின் வாழ்க்கை கேள்விக்குறி ஆகிவிட்டது. மக்களை வாழவைக்க, பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை எதிர்த்து எடப்பாடியார் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறார்.

ஆர்பாட்டம்

18 மாத ஆட்சியில் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்டத்துக்கு செய்த மகத்தான சாதனை, தன் தந்தை பெயரில் நூலகம் அமைத்ததுதான். மதுரைக்கு வேறொன்றும் செய்யவில்லை. இந்த டிஜிட்டல் யுகத்தில் பல கோடி ரூபாயை நூலகத்திற்காக செலவு செய்யும் அக்கறையை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட காட்டவில்லை.

ஆர்.பி.உதயகுமார்

தமிழகத்தில் லஞ்சம், ஊழல் அதிகரித்துள்ளது. அம்மா ஆட்சி காலத்தில் துறை தோறும் விருதுகளை பெற்று சாதனை படைத்தோம். ஆனால் இன்றைக்கு துறைதோறும் சீர்கேடு ஏற்பட்டு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

2014-ம் ஆண்டில், முல்லை பெரியாறு பிரச்னையில் மிகப்பெரிய தீர்ப்பை அம்மா பெற்று தந்தார்கள். தொடர்ந்து எடப்பாடியாரும் அந்த தீர்ப்பை கட்டி காத்து வந்தார். முல்லைப் பெரியாறு ஜீவாதார உரிமை மட்டுமல்ல, அது மக்களின் வாழ்வாதார உரிமையாகும்.

தற்போது முல்லைப் பெரியாறில் கேரள அரசு, புதிய அணை கட்ட ரூ 1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பூர்வாங்கப் பணியினை தொடங்கிவிட்டது. நம் முதலமைச்சர் முல்லை பெரியாறை காப்பாற்ற எந்த தியாகமும் செய்வோம் என்று சொல்வார் என எதிர்பார்த்தோம். ஆனால், முல்லைப்பெரியாறு குறித்து வாய் திறக்கவில்லை .

அதேபோல், கேரள அரசின் டிஜிட்டல் ரீசர்வே மூலம் தமிழகத்தில் 15 தாலுகாக்களில் உள்ள நமது நிலப்பரப்பு பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கும் முதல்வர் வாய் திறக்கவில்லை. மக்களும் அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்றார்கள், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ஆர்பாட்டம்

18 மாத தி.மு.க ஆட்சியின் ஒரே சாதனை, உதயநிதியை அமைச்சராக்கியதுதான், வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. இன்றைக்கு மன்னர் ஆட்சி, சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது. இதை எதிர்த்து போராடும் நிலை உள்ளது. 

தமிழகத்தில் உள்ள 12,624 ஊராட்சிகள், அனைத்து மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், ஒன்றியங்களில் தி.மு.க.வை கண்டித்து மக்களுக்கு காவல் அரணாக எடப்பாடியார் உள்ளார்.

 எப்போது முதல்வராக எடப்பாடியார் வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த நாள் மக்களுக்கு பொன்னாள் ஆகும். கடந்த கால அம்மா ஆட்சியில் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்களை முடக்கி விட்டனர். மக்களை வாழவைக்க எந்த திட்டமும் தி.மு.க அரசு கொண்டு வரவில்லை. எடப்பாடியார் கொண்டு வந்த திட்டங்களைத்தான் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறக்கிறார்.

நடைப்பயிற்சியில் முதலமைச்சர் ஆர்வம் காட்டுகிறார், அதேபோல் முடங்கிவிட்ட அரசு நிர்வாகத்தை நடக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 



from Latest News https://ift.tt/54f0PHN

Post a Comment

0 Comments