நீலகிரி: இடி மின்னலுடன் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! - வெள்ளத்தில் மிதந்த குன்னூர்

மாண்டஸ் புயலின் தாக்கம் நீலகிரியிலும் எதிரொலித்த நிலையில், கடந்த வாரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் கடுமையான பனி மூட்டத்துடன் தொடர் சாரல் மழை பெய்து வந்நது. நேற்று முன்தினம் மாலை அவலாஞ்சி மற்றும் மசினகுடி பகுதிகளில் கனமழை பெய்தது. மசினகுடியில் பெய்த மழை காரணமாக முதுமலை வெளிமண்டல பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மழை வெள்ளம்

நேற்று முன்தினம் இரவு கெதறள்ளா ஆற்றைக் கடக்க முயன்ற 4 பெண் பக்தர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். 3 பெண்களை சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மாயமான மற்றொரு பெண்ணை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இடி மின்னலுடன் சுமார் 3 மணி நேரம் கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் குன்னூர் நகர சாலைகள் வெள்ளத்தில் மிதந்தன. நகரின் முக்கிய சாலைகளில் இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி நின்றதால் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் உழவர் சந்தை அருகில் பெரிய அளவிலான மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்சரிவு

குடியிருப்புகளுக்குள் மழைநீர் சூழ்ந்து சில வீடுகள் சேதமடைந்துள்ளன. வாகனங்களும் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மழை காரணமாக குன்னூர், கோத்தகிரி தாலுக்காவில் பள்ளிகளுக்கு மட்டும்‌ இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புகளை மதிப்பிடும் பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.



from Latest News https://ift.tt/ZQgzJcX

Post a Comment

0 Comments