'பிறந்தது 2023' : தமிழக அரசியல் களத்தில் கட்சிகள் சந்திக்க இருக்கும் சவால்கள் என்னென்ன?!

2021-ம் ஆண்டில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. தேர்தல் நடந்தாலும், தமிழக அரசியல் களம் சற்று அமைதியாக இருந்தது. 2022-ம் ஆண்டில் பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்பியது. இதையடுத்து சமூக வலைத்தளங்களை கன்டென்ட்டுகளை கொடுக்க ஆரம்பித்தார்கள் அரசியல் கட்சியினர். குறிப்பாக தமிழக அரசின் 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார், ஆளுநர். இதேபோல் அவ்வப்போது வெளியாகி வந்த பா.ஜ.க-வினரின், ஆடியோ தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறிப்பாக சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் டெய்சியை, ஓ.பி.சி பிரிவு மாநிலப் பொதுச்செயலாளர் சூர்யா சிவா ஆபாசமாகத் திட்டும் ஆடியோ வெளியாகி சர்சையை ஏற்படுத்தியது. இதேபோல் கோவை கார் குண்டுவெடிப்பு, இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல், உதயநிதி அமைச்சராக பதவியேற்றது போன்ற சம்பவங்கள் அரசியல் களத்தை பரபரப்பாகவே வைத்திருந்தது. மேலும் மீம் கிரியேட்டர்களுக்கு நல்ல தீனி போட்டது. இந்நிலையில்தான் 2023-ம் ஆண்டு பிறந்திருக்கிறது. எனவே புத்தாண்டில் தமிழக அரசியலில் நடக்கவிருக்கும் அதிரடி திருப்பங்கள் குறித்த கேள்வி எழுத்திருக்கிறது.

தமிழ்நாடு ஆளுநர்

இதுகுறித்து நம்மிடம் பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன், "2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கிறது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராவார்கள். திமுக கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. இது மேலும் வலுவடையும். மேலும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயற்சி செய்வார்கள். கேஸ் மானியம், டீசல் விலை குறைப்பு போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது. குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் இந்த ஆண்டும் நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இல்லை. அடுத்த ஆண்டு செயல்படுத்த வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இப்போது தான் நிதிநிலை மேம்பட்டு வருகிறது.

காங்கிரஸுக்கும் திமுக-வுக்குமான உறவு மேலும் வலுவடையும். மத்திய அரசு மூலமாக தமிழக அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். திமுகவில் உதயநிதிக்கான முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். அமைச்சரவை மாறுதல்கள் அதிகமாக நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. சில சீனியர் அமைச்சர்களின் செயல்பாடுகள் போதுமான அளவுக்கு இல்லை என்று ஸ்டாலின் நினைக்கிறார். மேலும் ஆளுநர் - திமுக அரசுக்கான மோதல் மேலும் அதிகரிக்கும். அவருக்கு எதிராக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

திமுக

2023-ம் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் அதிமுக பிளவு பட்டு இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆண்டின் இறுதியில் அதிமுக ஒன்றாக இருக்கிறதா அல்லது பிளவுபட்டு இருக்கிறதா என்பது தெரிந்துவிடும். இதேபோல் பிரதமர் மோடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரண்டு தரப்பினரும் ஒன்றாக இணைந்து விடுவார்கள். அண்ணாமலையின் பேச்சு இன்னும் அதிகரிக்கும்.

பாஜக மேலும் வளர்த்து வருகிறது என்ற பிம்பத்தை உருவாக்குவார்கள். மேலும் அதிமுகவை ஒன்றிணைய வைத்து கூடுதல் இடங்களை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுவார்கள். பாமக தொடர்ந்து தனியாக செல்வதாக சொல்லிக்கொண்டு இருப்பார்கள். இறூதியில் அதிமுக, பாஜக கூட்டணியில் இணைந்து விடுவார்கள். திமுக கூட்டணிக்கு முயற்சி செய்வார்கள், இருப்பினும் வாய்ப்பு மிகவும் குறைவு தான்.

காங்கிரஸை பொறுத்தவரை கே.எஸ்.அழகிரி மாற்றம் செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். கோஷ்டி பூசல் அதிகரிகமாக இருக்கிறது. இது வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். கமலை பொறுத்தவரை மாநில அரசின் மீதான விமர்சனங்களை முழுவதும் குறைத்து விடுவார். அதேநேரத்தில் மத்திய அரசை அதிகமாக விமர்சனம் செய்வார். மேலும் திமுக கூட்டணியில் ஒன்று, இரண்டு இடங்களை பெறுவதற்கு முயற்சி செய்வார்.

கே.எஸ்.அழகிரி

நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவார். ஆனால் வர மாட்டார். பெரிய அளவில் அரசியலில் இறங்குவதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. ரஜினியை பொறுத்தவரை அரசியலுக்குள் மீண்டும் வரமாட்டார். ஸ்டாலினுடன் நல்ல நட்பு இருக்கிறது.இந்த நட்பை தொடர்ந்து வலுப்படுத்துவார். சீமான் யாரிடமும் கூட்டணி வைக்காமல் வழக்கமான அரசியலை தொடருவார். மேலும் தனது பிரசாரத்தை மேலும் வலுப்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்துவார்.” என்கிறார்.

இந்த புதிய ஆண்டில் எந்த எந்த கட்சிகளில் என்ன என்ன மாற்றங்கள், சம்பவங்கள் நடக்கும் என நினைக்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க மக்களே..!



from Latest News https://ift.tt/JvlqVD8

Post a Comment

0 Comments