``புதுக்கோட்டையை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்!” - தொல்.திருமாவளவன்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தைக் கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

போராட்டத்தில் பேசிய அவர், ``கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு லால்குடி அருகே திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையை போல 20 ஆண்டு கழித்து புதுக்கோட்டையில் நடந்திருக்கிறது. இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதைப் போன்று இழிவான செயல் வேறொன்றும் இல்லை. இது தமிழ்நாட்டிற்கு பெரும் தலைக்குனிவும், வெட்கக்கேடும் ஆகும்.

இறையூர் மட்டுமல்ல புதுக்கோட்டையின் மற்ற பகுதிகளிலும் சாதிய தீண்டாமை இன்னும் அதிகமாக இருக்கிறது. மாவட்டத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகம் காணப்படுகிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தை வன்கொடுமை பகுதியாக அறிவிக்க வேண்டும்.

தமிழகம் முழுவதுமே சாதிய தீண்டாமைகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தமிழக அரசு முறையாக அமல்படுத்தாதது தான் காரணம். அரசு நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டினாலும், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். அதிகார வர்க்கமும் அரசு அதிகாரிகளும் இந்த சட்டத்தை இணைந்து நடைமுறைப்படுத்தினால் மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க முடியும். முதலமைச்சரை நேரில் சந்திக்கும் போது இந்தக் கோரிக்கைகளை அவரிடம் வலியுறுத்துவேன்.

வேங்கைவயலில் பட்டியலின மக்கள் கோயிலில் வழிபடவும், அங்கு சாமியாடிய பெண் பட்டியலின மக்களுக்கு எதிராக பேசியதற்காகவும் டீக்கடையில் இரட்டை குவளை முறையை கடைபிடித்தவர்கள் மீதும் ஆட்சியர் மற்றும் எஸ்.பி இருவரும் கைது நடவடிக்கை மேற்கொண்டது பாராட்டுக்குரியது. இதுதொடர்பாக, அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவினர் நேர்மையாக செயல்பட வேண்டும். தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு எந்தவித சிக்கலும் எப்போதும் இல்லை. எங்களது கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/W4Y9GUZ

Post a Comment

0 Comments