தூத்துக்குடி: அனுமதியின்றி வெட்டப்பட்ட 24 பனைமரங்கள்; போலீஸார் விசாரணை!

தமிழகத்தின் மாநில மரமாக பனைமரம் அங்கீகரிக்கப்பட்டு போற்றப்படுகிறது. உச்சி முதல் வேர் வரை இம்மரத்தின் அனைத்து பாகங்களும் பலன் அளிப்பதால்தான் பனையை ‘கற்பகத்தரு’ என்கிறார்கள். கடந்த 2018-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 5.10 கோடி பனைமரங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால், தொடர்ந்து அதிக எண்ணிக்கையில்  வெட்டப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை தற்போது பாதியாகக் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். 

வெட்டப்பட்ட பனைமரம்

கஜா புயலின் தாக்கத்தின் போது டெல்டா மாவட்டங்களில் பல வகை மரங்கள் வீழ்ந்து கிடக்க, பனைமரங்கள் மட்டுமே கம்பீரமாக நின்றன. பனைமரத்தின் சிறப்பு அறியப்பட்டதாலும் பனையின் முக்கியத்துவம் குறித்த பரவலான விழிப்புணர்வினாலும் இளம் தலைமுறையினரே கடந்த சில ஆண்டுகளாக கண்மாய்கள், குளங்கள், ஊரணிகள், சாலையோரங்களில் பனை விதையை ஊன்றி வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அரசு, வெளியிட்ட வேளாண்மை பட்ஜெட்டில், “தமிழர்களின் வாழ்வோடும் வளத்தோடும் ஒன்றுபட்டது பனைமரம். நீர்நிலைகளின் காவலன், மழை ஈர்ப்பு மையம் என அழைக்கப்படும் பனைமரங்களை விறகிற்காகவும், செங்கல்சூளைக்காவும் வெட்டப்படுவது தடுக்கப்படும். தவிர்க்க முடியாத சூழலில் பனைமரங்களை வெட்ட நேரிட்டால் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதி பெறுவது கட்டாயம்” என் அறிவிக்கப்பட்டது.  தமிழக அரசின்  இந்த அறிவிப்பு பனைத் தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் அனைவரின் மத்தியிலும் வரவேற்பினைப் பெற்றது.

வெட்டப்பட்ட பனைமரங்கள்

இதனையடுத்து பல மாவட்டங்களில் பனைவிதைகள் சேகரிப்பும் நடுதலும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.   இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்  தாலுகாவிற்குட்பட்ட பழனியப்பபுரத்தைச் சேர்ந்த விஷ்ணு பகவத்சலம் என்பவர், பழனியப்பபுரத்தில் இருந்து நாசரேத் செல்லும் சாலையில் உள்ள தனக்குச் சொந்தமான 9.5 சென்ட் நிலத்தை தனியார் சோலார் கம்பெனிக்கு விற்பனை செய்ததாகக்  கூறப்படுகிறது.

இந்த நிலையில், இன்று  அந்த இடத்தில் உள்ள  24 பனை மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. தனியார் சோலார் பேனல் கம்பெனியினர்தான் காரணம் எனச் சொல்லப்பட்டது.   இது சம்மந்தமாக பழனியப்பபுரத்தை ச் சேர்ந்த எமர்சன் என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சாத்தான்குளம் போலீஸார்  அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர்.  பனை மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட  இடத்தைப் பார்வையிட்டனர்.

தனியார் சோலார் கம்பெனி

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றியே இந்த 24 பனைமரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளது. எனவே,  உரிய விசாரணை நடத்தி பனைமரங்களை வெட்டியவர் மீது நடவடிக்ககை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என சுற்றுசூழல் ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.   



from மாவட்ட செய்திகள் https://ift.tt/RNGPpOM

Post a Comment

0 Comments