விருதுநகர்: ஆசிரியையிடம் நகைப்பறிப்பு; துரத்திச் சென்றுப்பிடித்த போக்குவரத்து காவலர்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எஸ்.ஆர்.நாயுடு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி, ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் இவர், அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தனது ஸ்கூட்டருக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் டூவீலரில் வந்த இரண்டுபேர், அன்னலட்சுமியின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், `திருடன்..‌ திருடன்..’ என கூச்சலிட்டார்.

செயின் பறிப்பு

அன்னலட்சுமியின் சத்தம் கேட்டு அருகே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போக்குவரத்து காவலர் சதீஷ்குமார், டூவீலரில் வந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட நபர்களை விரட்டிப்பிடிக்க முயன்றார். ஆனால், கொள்ளையர்கள் இருவரும், காவலர் சதீஷ்குமாரிடம் பிடிபடாமல் தப்பிச்செல்லவும் அவர்களை விடாமல் துரத்திக்கொண்டு ஓடினார்.

டூவீலரில் தப்பிய கொள்ளையர்கள் தாயில்பட்டி சாலையில் சுப்பிரமணியபுரம் அருகே வேகமாக சென்றபோது, காவலர் சதீஷ்குமார் சத்தம்போட்டு அங்கு சுற்றிநின்ற பொதுமக்களை உஷார்படுத்தினார். இதனையடுத்து, சுதாரித்துக்கொண்ட பொதுமக்கள், டூவீலரில் வந்த கொள்ளையர்களை மறித்து நிற்கவும், காவலர் சதீஷ்குமார் அவர்களை மடக்கிப்பிடித்தார். இதுதொடர்பான‌ தகவல் சாத்தூர் டவுன் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் பிடிபட்ட கொள்ளையர்கள் இருவரையும் சாத்தூர் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

கொள்ளையர்கள்

அங்கு போலீஸ் விசாரணை நடத்தியதில், செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் முத்துப்பாண்டி (23) மற்றும் அழகுராஜா (24) என்பது தெரியவந்தது. இதனையடுத்து புகாரின்பேரில் அவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம், அன்னலட்சுமியிடம் வழிப்பறி செய்து பறிக்கப்பட்ட தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது‌. செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை துணிச்சலாக விரட்டிச்சென்று மடக்கிப்பிடித்த சம்பவத்தை அறிந்த விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர், போக்குவரத்து காவலர் சதீஷ்குமாரை அழைத்து பாராட்டினார்.



from Latest News https://ift.tt/FOEaUTP

Post a Comment

0 Comments