தூத்துக்குடியில் உள்ள லசால் மேல்நிலைப்பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணிபுரிந்து வருபவர் இசிதோர். இவர், ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அந்தந்த ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகளை மையமாக வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருகிறார்.
இதுவரை இயற்கை வளப் பாதுகாப்பு, புவிப்பாதுகாப்பு, பழைமையான கலைகள், உலக சமாதானம், மத நல்லிணக்கம், செல்போன் கதிர்வீச்சுக்களால் ஏற்படும் பாதிப்புகள், கல்வியின் அவசியம், இயற்கைச் சீற்றங்கள், போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள், கொரோனா தடுப்பு வழிமுறைகள், விவசாயிகளின் நீடித்த போராட்டம், உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு குடில்களைக் கடந்த 19 ஆண்டாக அமைத்து வந்துள்ளார்.

20வது ஆண்டான இந்த ஆண்டு ரஷ்யா – உக்ரைன் போரினால் உருவாகியிருக்கும் உலக அமைதியின்மை நீங்கி உலக நாடுகளிடையே மீண்டும் சகோதரத்துவம் மேலோங்கிட வேண்டும் என்ற கருத்தினை மையமாக வைத்தும் 'இரக்க உணர்வுடன் உலகை வழி நடத்துவோம்' என்ற கருத்தினை வழியுறுத்தியும் இந்தாண்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்திருக்கிறார்.
இதுகுறித்து ஓவிய ஆசிரியர் இசிதோரிடம் பேசினோம், “ரஷ்யா- உக்ரைன் நாடுகளிடையே நடந்த போரினால் உக்ரைன் நிர்மூலமாக்கப்பட்டிருக்கிறது. வீடுகள், பள்ளிகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை தரைமட்டமாக்கப் பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாகவும் உக்ரைன் நாடு, மிகப்பெரும் இழப்பினைச் சந்தித்து இருக்கிறது. ரஷ்ய நாட்டுப் பொருளாதாரமும் முடங்கியுள்ளது. உலக அளவில் கோதுமை, பார்லி, சோளம், சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் இரண்டு நாடுகளுமே முக்கியப் பங்கு வகித்து வந்தன. இந்தப் போரினால் இவற்றின் ஏற்றுமதி தடைப்பட்டுள்ளது. சமாதானப் போக்கு இல்லாததும் இரக்க உணர்வு இல்லாததுமே அப்போருக்கு காரணமாகத் தெரிகிறது.

நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பது அந்தந்த நாட்டு அதிபர்களைச் சார்ந்தது. அவர்களுக்கு மக்களின் நலனில் அதிக பொறுப்பு உள்ளது. இனி இதுபோல் ஒரு போர் எந்த ஒரு நாட்டிலும் நடக்கக்கூடாது. இப்போரில் மக்கள் பட்ட துயரங்கள், மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து தினசரி, வார இதழ்களில் வெளியான புகைப்படங்கள் மற்றும் சார்ட் அட்டைகளில் நானே கைப்பட வரைந்த ஓவியங்கள், இதுதொடர்பான பொம்மைகள் உள்ளிட்டவற்றைக் காட்சிப்படுத்தியிருக்கிறேன்.
நான் விகடனின் வாசகர் என்பதால், ’ஆனந்த விகடன்’, ‘ஜூனியர் விகடன்’ இதழ்களில் வெளியான புகைப்படங்கள் உதவியாக இருந்தன.
வீடு நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்க முடியும். கூட்டுக்குடும்ப வாழ்வு என்பது தற்போது சிதைந்து விட்டது. பொருள் தேடும் எண்ணத்தோடு வீட்டிலுள்ள பெற்றோர்களும், பெரியவர்களும் தனித்து இருக்க விடப்படுகிறார்கள். பெற்றோர்களும், பெரியவர்களும் ஒவ்வொரு குடும்பங்களின் விலை மதிப்பில்லா சொத்துக்கள். அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், அன்புக்காக ஏங்கும் அவர்களை அரவணைக்க வேண்டும் என்ற கருத்தினை எடுத்துச் சொல்லும் விதமாகவும் சில ஓவியங்களை வரைந்து காட்சிப்படுத்தியிருக்கிறேன்.

அதேபோல வறியோருக்கு உதவி செய்தல், அன்னதானம், கண் தானம், உடல் உறுப்பு தானம் ஆகியவற்றையும் வலியுறுத்தி சில ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. கிறிஸ்து பிறந்துள்ள குடிலையும் ஒவ்வோர் ஆண்டும் வித்தியாசமாக வடிவமைப்பது வழக்கம். இந்தாண்டு பயன்படுத்தப்பட்ட 2,000 ஸ்கெட்ச் பேனாக்களைக் கொண்டு குடில் அமைத்துள்ளேன். குடிலின் தரைப்பகுதியில் பல வண்ண சாயங்களில் முக்கி எடுக்கப்பட்டு உலர வைக்கப்பட்ட மரத்தூளைப் பயன்படுத்தியிருக்கிறேன்” என்றார்.
இந்த விழிப்புணர்வுக் குடிலை அப்பகுதி பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/aId9Lo4
0 Comments