சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், படமீஞ்சியைச் சேர்ந்தவர் குமார் (410. இவர், புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அரசு போக்குவரத்து பணிமனையில் பேருந்து ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். திண்டுக்கல்லிலிருந்து பொன்னமராவதிக்கு சிங்கம்புணரி வழியாகச் செல்லும் பேருந்தை இயக்கிக் கொண்டு வந்திருக்கிறார். பேருந்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
மேலைச்சிவபுரி என்ற இடம் அருகே வந்தபோது, குமாருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டிருக்கிறது. தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை உணர்ந்த அவர், உடனே பேருந்தை வலியை பொறுத்துக் கொண்டு வளைவில் திருப்பி நிறுத்தியிருக்கிறார். நிறுத்திய அடுத்த நொடியில் இருக்கையிலிருந்து சரிந்து கீழே விழுந்தார்.
உடனே பதறி அடித்துக் கொண்டு போய் டிரைவரைத் தூக்கிய பயணிகள், அவரை சிகிச்சைக்காக வலையப்பட்டி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் அவர் குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. உடனே, மாற்று ஓட்டுநர் மூலம் பேருந்து அங்கிருந்து கிளம்பியிருக்கிறது. திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டும், வேகத்தில் வந்த பேருந்தை சாதுர்யமாக கட்டுப்படுத்தி தன் உயிரைக் கொடுத்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளைக் காப்பாற்றியிருக்கிறார் குமார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/6QuEel5
0 Comments