தென்காசியிலிருந்து நேற்று முந்தினம் இரவு மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், நேற்று மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
தூய்மைப் பணியாளர்களின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வினை மேம்படுத்தும் பொருட்டு 2022-23 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கையில் அறிவித்தபடி தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் வகையிலான இத்திட்டத்தின் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு முதலைமைச்சர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
மேலும் இத்திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்டார். பின்னர், தூய்மைப் பணியாளர்களை கண்டறியும் பணியினை மேற்கொள்வதற்கான மொபைல் செயலியையும் வெளியிட்டார்.
`இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301 பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் பயனடைவார்கள். இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
`நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6-ல் திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது' என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, இ. பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கே.ஆர். பெரியகருப்பன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், சு.வெங்கடேசன்.எம்.பி, மேயர் இந்திராணி பொன்வசந்த் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்பு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான நிலையம் செல்லும் வழியில் அம்பேத்கர் சிலையையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விசிக தலைவர் திருமாவளவன், அமைச்சர்கள் பிசிஆர் பழனிவேல் தியாகராஜன், கே. என் நேரு, பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/Ybc3fsE
0 Comments