`புத்தாண்டுக்காக அதிகமாக வெடிபொருள்கள் வைத்திருந்தார்’ - நாமக்கல் வெடி விபத்தில் நடந்தது என்ன?!

நாமக்கல் மாவட்டம், மோகனூர் மேட்டு தெருவைத் சேர்ந்தவர் தில்லைகுமார். இவர், அப்பகுதியில் பட்டாசு விற்பனை கடை நடத்தி வந்திருக்கிறார். அவரது வீட்டில் இருப்பு வைத்திருந்த பட்டாசு குடோனில் நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் திடீரென தீப்பிடித்து வெடிக்க ஆரம்பித்தது. .அதை தொடர்ந்து, பயங்கர வெளிச்சத்துடன் குடோனில் இருந்த அனைத்து பட்டாசுகளும் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடி சத்தம் கேட்டு அருகாமையில் உள்ள வீடு குடியிருந்தவர்கள் தூங்கிகொண்டிருந்தவர்கள், தூக்கம் கலைந்து வெளியே ஓடி வந்து பார்த்தபோது, தீ கொழுந்துவிட்டு எறிந்தது.

பட்டாசுகள் வெடித்ததில் அருகில் உள்ள வீடுகளும் பதிப்புள்ளானது. அப்போது அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் இதுகுறித்து நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பட்டாசு குடோன் மற்றும் அருகில் உள்ள வீடுகளில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி அருகாமையில் உள்ள வீடுகளுக்கு தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

வெடி விபத்து

இதனால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன் அருகில் இருந்த நான்கு குடிசை வீடுகளும், ஐந்து ஓட்டு வில்லை வீடுகளும் தீப்பற்றி எரிந்து முற்றிலும் சேதமானது. பட்டாசு குடோனில் தீப்பிடித்து எரிந்து பட்டாசுகள் வெடித்ததில் பட்டாசு குடோன் உரிமையாளர் தில்லைகுமார், அவரது மனைவி பிரியா, தில்லைகுமாரின் தாய் செல்வி, அருகாமையில் உள்ள வீடுகளைச் சேர்ந்த பெரியக்காள், சண்முகம் மகன் அமரீஷ், பா.ஜ.கவில் மாவட்டப் பொறுப்பில் உள்ள வழக்கறிஞர் கார்த்திகேயன், செந்தில் குமார், பழனியம்மாள் மற்றும் பலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் இருந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர்களை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், பட்டாசு வெடித்து அதிக தீக்காயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த பட்டாசு குடோன் உரிமையாளர் தில்லைகுமார், அவரது மனைவி பிரியா, தில்லைகுமாரின் தாய் செல்வி, அருகாமையில் உள்ள வீட்டில் இருந்த மூதாட்டி பெரியக்காள் ஆகிய நான்கு பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மோகனூர் காவல் நிலைய வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களின் முதல்கட்ட விசாரணையில், இறந்து போன தில்லைகுமார் பட்டாசு தயாரிக்கவும், விற்பனை செய்யவும் உரிமம் பெற்றுள்ளவர் என்பதும், தற்சமயம் உரிமத்தை புதுப்பிக்க விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தில்லைகுமார் குடியிருக்கும் வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் மற்றும் சிலிண்டர் வெடித்தல் நான்கு நபர்கள் உயிரிழந்தும், மேலும் நான்கு நபர்கள் உட்பட பலர் காயம் அடைந்தும் விசாரணையில் தெரிய வந்தது.

வெடி விபத்து

மேலும், சம்பவ இடத்தை சுற்றிலும் இருந்த நான்கு கூரை வீடுகள் மற்றும் நான்கு ஓட்டு வீடுகள் பட்டாசு வெடித்ததில் முழுமையாக தீப்பிடித்து இடிந்து சேதம் அடைந்துள்ளது. அதோடு, பட்டாசு வெடித்து நான்கு பேர் உயிரிழந்ததோடு, மேலும் 4 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதால், சிகிச்சை பெற்று வருபவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்து பேசும், அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள், ``நியூ இயர் பிறக்க இருப்பதால், அதிகமாக வெடிகள் விற்கும் என்று நிறைய பட்டாசுகளையும், மருந்துகளையும் வாங்கி வைத்திருக்கிறார் தில்லைகுமார். அந்த மருந்து அழுத்தத்தால், வெடித்ததோடு, அருகில் சிலிண்டர் இருந்ததால், தீவிபத்துக்கு பெரிதாக ஏற்பட்டு, உயிர்பலி ஏற்பட்டுவிட்டது. அதோடு, அந்தப் பகுதியில் கூரை வீடுகள் அதிகம் இருந்ததால், அந்த வீடுகளுக்கும் தீ பரவிட்டு" என்றார்கள். இந்நிலையில், இந்த வெடிவிபத்து சம்பவத்தை அறிந்த தமிழக முதல்வர் ஸ்டாலின், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்திருப்பதோடு, இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 -ம் நிவாரணம் வழங்குவதாக உத்தரவிட்டுள்ளார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/zIU7R3d

Post a Comment

0 Comments