புதுக்கோட்டை: காமன்வெல்த் பளுதூக்குதலில் தங்கம் வென்ற லோகப்பிரியா - வெற்றியைக் கொண்டாட முடியாத சோகம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வமுத்து-ரீட்டா தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள். அதில் மூத்த மகள் லோகப்பிரியா எம்.பி.ஏ படித்து வருகிறார். இவர்கள் கடந்த சில ஆண்டுகளாகவே, பட்டுக்கோட்டையில் வசித்து வருகின்றனர். ரீட்டா, பட்டுக்கோட்டையில் உள்ள பொதுக்கழிப்பறை ஒன்றில் பணம் வசூலிக்கும் பணி செய்கிறார். செல்வமுத்து பெயிண்டர் வேலை செய்து குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.

சிறு வயது முதலே பளுதூக்குதலில் ஆர்வம் காட்டிவரும் லோகப்பிரியா மாவட்ட, மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் பல்வேறு பதக்கங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்.

ஏழ்மை நிலையில் தவித்த லோகப்பிரியாவின் குடும்பத்திற்கு ஆரம்பம் முதலே தேவையான உதவிகளையும் செய்து கைகொடுத்திருக்கிறார் பயிற்சியாளர் ரவி. இந்த நிலையில் தான், தற்போது நியூசிலாந்து நாட்டில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்வதற்காக தமிழகத்தில் இருந்து 11பேர் சென்றிருக்கின்றனர். அதில், லோகப்பிரியாவும் ஒருவர். லோகப்பிரியா பளு தூக்கும் நிகழ்வு தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பாகவே, அவரின் தந்தை திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் தான், பதறிப்போன குடும்பத்தினர் இந்தத் தகவலை, உடனே லோகப்பிரியாவிடம் தெரிவிக்கவில்லை. பயிற்சியாளரிடம் மட்டும் கூறி போட்டி முடிந்த பின்பு தெரிவிக்கக் கூறுயிருக்கிறார்கள்.

பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில் 350 கிலோ எடையைத் தூக்கி தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றி இந்தியாவிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தார். எனினும் லோகப்பிரியாவுக்கு சந்தோஷம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. தங்கம் வாங்கிய கையோடு, மேடையை விட்டு இறங்கிய லோகப்பிரியாவிடம், அப்பா இறந்துவிட்டதாக பயிற்சியாளர் கூறிய செய்தி, அவரின் இதயத்தை நொறுங்க செய்துவிட்டது. `இந்தப் போட்டியிலும் என் மகள் தங்கம் வாங்குவாள். தங்கம் வாங்கி சாதிக்க வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, நான் தங்கம் வாங்கியதைப் பார்க்கக் கூட இல்லாமல் போய்விட்டாரே என லோகப்பிரியா கண்ணீர் விட்டு கதறி அழுது, புலம்பியது அங்கிருந்த அனைவரிடமும் சோகத்தை ஏற்படுத்தியது.

பயிற்சியாளர் சக, வீரர், வீராங்கனைகள் அவரைத் தேற்றினர். இதுபற்றி, `தங்கம் வென்றும், பார்க்க அப்பா இல்லாமல் போய்விட்டாரே’ என்று சமூக வலைதளங்களில் லோகப்பிரியா வெளியிட்ட வீடியோ வேகமாக பரவி வருகிறது. ஊரே இவரின் வெற்றியைக் கொண்டாட வேண்டிய நேரத்தில், தந்தையின் இழப்பு வெற்றிக்கொண்டாட்டத்தை நிறுத்தி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/Ux7dOVl

Post a Comment

0 Comments