'கண்ணாடித் துண்டுகளுடன் கட்டு' - தொழிலாளிக்கு அரசு மருத்துவமனையில் நேர்ந்த அவலம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி(63). இவர், கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முந்தினம் பெரியசாமி தனது வீட்டு அருகாமையில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று, ரேஷன் பொருள்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்பி கொண்டு இருந்துள்ளார். அப்போது, அவ்வழியாக வந்த கார் ஒன்று பெரியசாமி ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலைதடுமாறி பெரியசாமி கீழே விழுந்தால், அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அருகே இருந்த பொதுமக்கள் பெரியசாமியை மீட்டு ராசிபுரம் அரசின் மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

அகற்றப்படாத கண்ணாடி சில்லுகள்

அங்கே ஸ்கேன் எடுக்கும் பிரிவில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர் தொடர் விடுமுறையில் உள்ளதால், மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, காலில் கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தனக்கு கால்களில் அதிக வலி ஏற்படுவதாக முதியவர் கதறி உள்ளார். பின்னர், உறவினர்கள் அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

அப்போது, பெரியசாமியின் கால்களில் உள்ள கண்ணாடி துகள்களை முறையாக அகற்றாமல், காயம் பட்ட இடத்தில் இறுக்கமாக கட்டுப்போட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் அப்படியே சேலம் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளது தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் பெரிய சாமிக்கு காயம் பட்ட இடத்தில் இருந்து கண்ணாடி துகள்களை எடுக்கும் வீடியோவானது, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதுகுறித்து, பணியில் இருந்த மருத்துவர் ஒருவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மருத்துவமனையில் எக்ஸ்-ரே ஸ்கேன் செய்யும் பணியாளர் விடுமுறையில் உள்ளதால், ஸ்கேன் செய்ய முடியாமல் வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்" என்று பதிலளித்துள்ளார்.

காயமடைந்த பெரியசாமி

இன்னொருபக்கம், "ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையால், இதுபோல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. விபத்தில் படுகாயமடைந்த அந்த பெரியவருக்கு விபத்து நடந்த இடத்தில் இருந்து 108 ஆம்புலன்சில் அரசு மருத்துவமனை வரை வரும் வழியில், காயம் பட்ட இடத்தில் அவருக்கு முதல் உதவி சிகிச்சை கூட அளிக்கப்படவில்லை" என்றனர் வேதனையாக!.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/INvYzH3

Post a Comment

0 Comments