30 ஆண்டுகளில் 55-வது முறையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி... யார் இந்த அசோக் கெம்கா?!

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்கா (Ashok Khemka) தன்னுடைய 30 ஆண்டு பணிக்காலத்தில் 55-வது முறையாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டிருக்கிறார்.

திங்கள்கிழமை ஹரியானா அரசு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அசோக் கெம்காவை இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அவருடன் மேலும் நான்கு சிவில் சர்வீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த அசோக் கெம்கா, இப்போது ஆவணக் காப்பகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. அந்த அறிக்கையில் எதற்காக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார் என்பது தொடர்பான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

அசோக் கெம்கா

இவர் அண்மையில் ஹரியானா தலைமைச் செயலாளர் சர்வேஷ் கௌஷலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ``தன்னுடைய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உயர்கல்வித் துறையுடன் இணைக்கப்பட்ட பிறகு, தனக்கு போதுமான வேலை இல்லை’’ என்று கூறியிருந்தார். அவர் கடிதம் எழுதிய சில நாள்களிலேயே இந்த டிரான்ஸ்பர் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த கடிதத்தில்,`` தன்னுடைய துறையில் அதிகபட்சம் வாரத்துக்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே வேலை இருக்கிறது. மேலும், கூடுதல் தலைமைச் செயலாளர் பதவியில் இருப்போருக்கு வாரத்திற்குக் குறைந்தது 40 மணிநேரம் வேலை இருக்கும் பணியை ஒதுக்க வேண்டும் என பரிந்துரை உள்ளதாகவும், அதற்குக் குறைவாக வேலை இருந்தால் மற்ற துறைகளுக்கு அனுப்பலாம்’’ என்றும் கடிதத்தில் கூறியிருந்தார்.

இந்த நிலையில், காப்பகத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக கெம்கா நியமிக்கப்பட்டிருக்கிறார். பா.ஜ.க தலைமையிலான ஆட்சிக் காலத்தில் கெம்கா ஆவணக் காப்பகத் துறைக்கு நான்காவது முறையாக நியமிக்கப்பட்டிருக்கிறார். முன்னதாக காப்பகத் துறையின் தலைமை இயக்குநராகவும், பின்னர் முதன்மைச் செயலாளராகவும் பணியாற்றினார். 2013-ம் ஆண்டு ஹரியானாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோதுதான், கெம்கா முதன்முதலில் இந்த துறைக்கு மாற்றப்பட்டார்.

அசோக் கெம்கா

அவர் கடைசியாக அக்டோபர் 2021-ல் காப்பகத்துறையிலிருந்து மாற்றப்பட்டார். அதன் பிறகு பிப்ரவரி 2022 -ல் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றார். தொடர் இடமாற்றங்கள் மூலம் கவனிக்கப்பட்ட கெம்கா, அண்மையில் நடைபெற்ற சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டினார்.

அசோக் கெம்கா

கடந்த அக்டோபரில் தான் பதவி உயர்வு பெற்றதுக்குப் பிறகு, தன்னுடைய ட்விட்டர் பதிவில், ``புதிய செயலாளர்களாக நியமிக்கப்பட்ட என் பேட்ச்மேட்களுக்கு வாழ்த்துக்கள்! இது மகிழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் என்றாலும், ஒருவரின் சுயம் பின்தங்கியிருப்பது அவநம்பிக்கையைக் கொண்டுவருகிறது. நேரான மரங்கள் எப்போதும் முதலில் வெட்டப்படுகின்றன." என வெளிப்படையாக தன் அதிருப்தியை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/tuGwo53

Post a Comment

0 Comments