கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சித்தலைவருமானவர் சித்தராமையா (75). 1984-களில் அரசியல் வாழ்வை தொடங்கி, ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் சுயேட்சையாக களம் கண்டு எம்.எல்.ஏ வாக வென்றுள்ளார். பின் கடந்த, 17 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார். தற்போது, கார்நாடக காங்கிரஸின் ‘ஐகான்’ இவர் தான்.
இன்னும் நான்கு மாதங்களுக்குள் கர்நாடகத்தில் சட்டப்பேரவைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தினமும் பேச்சு, பேட்டி, அறிக்கை என, அரசியல் களத்தை சூடாகவே வைத்து வருகிறார். இவர் எந்தத்தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், ‘வரும் தேர்தலில் கோலார் மாவட்டத்தில் போட்டியிட திட்டமிட்டுள்ளேன். ஆனால், இது மேலிடத்தின் உத்தரவுக்கு உட்பட்டது,’ என தெரிவித்து, கோலார் மாவட்டத்தில் போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார். கோலார் மாவட்டத்தில் சித்தராமையா சந்திக்கவுள்ள பிரச்னைகள் குறித்தும், கடந்த தேர்தலில் அவரின் வெற்றி குறித்தும் பார்ப்போம்...
ஒரு படுதோல்வி, அதிர்ச்சியான வெற்றி!
கடந்த, 2018-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி, பாகல்கோட்டை மாவட்டத்திலுள்ள பதாமி ஆகிய இரு தொகுதிகளில் சித்தராமையா போட்டியிட்டார். சாமுண்டீஸ்வரி தொகுதியில், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளர் ஜி.டி.தேவகெளடாவிடம், 36,042 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தார். மறுபுறம் பதாமியில், தனக்கு எதிராக போட்டியிட்ட பா.ஜ.க ஸ்ரீராமலுவை விட வெறும், 1,696 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பதாமியில் சித்தராமையாவின் சமூகமான குறுபா மக்கள் பலர் இருந்தும், லிங்காயத் சமூக மக்களின் ‘டாமினேஷன்’, வாக்கு வங்கி சிதறல் காரணமாக குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியடைந்தார்.
தொகுதி – ‘கோலார்’
கோலார் மாவட்டத்தில் மொத்தம், ஆறு சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், கோலார் தொகுதியை பொறுத்தவரையில், 18 சதவீதம் குறுபா மக்கள், 19 சதவீதம் பட்டியலின மக்கள், 20-க்கும் அதிகமான சதவீதத்தில் இஸ்லாமிய மக்களும், மீத எண்ணிக்கையில் கெளவுடா, லிங்காயத் மற்றும் ஒக்கலிகா மக்கள் உள்ளனர்.
இந்த தொகுதியில், 2018ல் மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் போட்டியிட்ட ஸ்ரீனிவாசகெளவுடா தற்போது எம்.எல்.ஏ வாக உள்ளார். ஆனால், இவர் கடந்த, 3 மாதங்களாகவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், தன் தொகுதியை சித்தராமையாவுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு, காங்கிரஸ் கட்சியில் இணைவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும் வரும் தேர்தலுக்கு கோலார் தொகுதியில் போட்டியிட, பல ஆண்டுகளாக கட்சியிலுள்ள சி.எம்.ஆர் ஸ்ரீநாத் என்பவரை களமிறக்குவதாக அறிவித்துள்ளது.
‘டப் பைட்’ சூழல் உருவாகும்!
மறுபுறம் கோலார் தொகுதியில் அதிக செல்வாக்கு கொண்ட, சித்தராமையாவின் அதே குறுபா சமூகத்தை சேர்ந்தவர் வர்துார் பிரகாஷ். சுயேட்சையாக போட்டியிட்ட இவர், 2008 மற்றும் 2013-ல் கோலார் எம்.எல்.ஏ வாக வெற்றி பெற்றுள்ளார். சித்தராமையாவின் ஆதரவாளராக இருந்த இவர், கடந்தாண்டு பா.ஜ.கவில் இணைந்து, வரும் தேர்தலில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார்.
சுயேட்சையாகவே செல்வாக்குள்ள வர்துார் பிரகாஷ் பா.ஜ.கவின் ஆதரவுடன் களம் காண்பதுடன், குறுபா மக்களிடம் நல்ல மதிப்பை பெற்றுள்ளதால், பெரும் அளவில் ஓட்டுக்களை பெறுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. கோலாரில் மும்முனை போட்டிச்சூழல் உள்ளதால், கடுமையாக போராடினால் மட்டுமே வெற்றி என்ற நிலை உருவாகியுள்ளது.
‘தோல்வியை சந்தித்தால் சிரமம்‘!
அரசியல் விமர்சகர்களிடம் பேசினோம், ‘‘கடந்த முறை இரண்டு இடங்களில் போட்டியிட்ட சித்தராமையா, இந்த முறை ஒரே தொகுதியில் போட்டியிடுகிறார். ‘சேப் சீட்’ என நினைத்து கோலார் தொகுதியை தேர்வு செய்துள்ளார். ஒரு புறம் இஸ்லாமிய மக்கள், கெளவுடா, லிங்காயத் சமூக ஓட்டுக்கள் அதிக அளவில், ஜனதா தளம் கட்சிக்கு செல்லும். குறுபா மக்களின் ஓட்டுக்கள் சித்தராமையா, வர்துார் பிரகாஷ்க்கு பிரிந்து செல்லும். பட்டியலின மக்களின் ஓட்டுக்கள் யாருக்கு செல்லுமென்பதே தெரியாத சூழல் நிலவுகிறது. கோலார் தொகுதியில் காங்கிரஸ் சார்பில், ஏழு முறை எம்.பியாக தேர்வாகி, முன்னாள் அமைச்சராக உள்ள கே.ஹெச்.முனியப்பா மற்றும் அவரது தொண்டர்கள், சித்தராமையாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் விலகியே உள்ளனர். சமூகங்களின் வாக்கு வங்கி சிதறல், போதிய ஆதரவு இல்லாத நிலை உள்ளிட்ட சூழல்கள் உருவாகி, ஒரு வேளை தோல்வியை சந்தித்தால், சித்தராமையாவுக்கு சிரமத்தையும், அது அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை உருவாக்கும்,’ என்றனர்.
from Latest News https://ift.tt/s2PyUQ1
0 Comments