`திமுக ஒருபக்கம்... அதிமுக மறுபக்கம்’ - 500 காளைகளுடன் களைகட்டிய தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு!

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சி புனித அன்னை ஆரோக்கிய தேவாலய திருவிழா, மற்றும் புத்தாண்டையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதுவே தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி கடந்த 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், போதுமான முன்னேற்பாடுகள் செய்யாததால், அனுமதி மறுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தேவையான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு தற்போது, ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக நடைபெற்றது. தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்த பின் முதலில் கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இதனை யாரும் பிடிக்கவில்லை. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டினை தொடங்கி வைத்தனர். வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளும் சீறிப்பாய்ந்தன. சில காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல், சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. சில வீரர்கள் லாவகமாக மாட்டின் திமிலை இறுகபிடித்து அடக்கி, பரிசுகளை அள்ளிச்சென்றனர். சில மாடுகள் களத்தில் நின்று விளையாடி மாடுபிடி வீரர்களை மிரள வைத்தது. காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் நாற்காலி, கட்டில், பீரோ, மிக்சி, குக்கர், சைக்கிள் உள்ளிட்டவையும், ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட்டன.

மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்து கொண்டிருந்தது. மழையிலும் பொதுமக்கள் நனைந்தபடி ஜல்லிக்கட்டினை வீட்டின் மொட்டைமாடிகளிலும், மரங்களிலும் அமர்ந்து பார்வையிட்டனர். ஜல்லிக்கட்டில் மொத்தம் 500 காளைகள் பங்கேற்றன. 270 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 72 பேர் காயமடைந்தனர். மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே தலைமையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் தென்னலூரைச் சேர்ந்த யோகேஷ், என்ற மாடுபிடி வீரர் 17 காளைகளை மடக்கிப் பிடித்து டூவிலரினைத் தட்டிச் சென்றார். தஞ்சாவூர் மாவட்டம் மருதக்குடியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு டூவிலர் பரிசாக வழங்கப்பட்டது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் செல்லபாண்டியன் தலைமையில் தி.மு.க.வினர் பரிசுகளை அறிவித்து வழங்கிக் கொண்டிருந்தனர். முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு அ.தி.மு.க. சார்பில் பரிசுகளை வழங்கினார்.

வாடியின் வலப்பக்கம் தி.மு.கவினர், இடப்பக்கம் அ.தி.மு.கவினர் என போட்டி போட்டுக் கொண்டு பரிசுகளை வழங்கினர். இருதரப்பினரும் ஜல்லிக்கட்டு கொண்டு வந்தது தாங்கள் தான் என்று மாறி, மாறி பேசிக்கொண்டனர். அப்போது, அ.தி.மு.க தரப்பில் ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர். உடனே, தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் அரசியல் மேடை இல்லை என்று கூறி அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விஜயபாஸ்கரின் சார்பில் இறக்கப்பட்ட அவரது இரண்டு காளைகளும் பிடிபடாத காளைகளாக திகழ்ந்தது. தொடர்ந்து, கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயரில் காளை ஒன்று அவிழ்த்துவிடப்பட்டது. அப்போது, வாடிவாசலில் சீறிப்பாய்ந்த அந்த காளையை அடக்கிவிட்டனர். அங்கிருந்த அ.தி.மு.கவினர் உடனே, அந்த வீரரைக் கூப்பிட்டு கமிட்டி கொடுக்கும் பரிசோடு, ரொக்கப்பரிசுகளையும் வழங்கினர். முன்னதாக, தி.மு.கவினருக்கு ஒருபக்கம், அ.தி.மு.கவினருக்கு மறுபக்கம் என வழிநெடுகிலும் வரவேற்பு பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. அரசியல் ஜல்லிக்கட்டாக தச்சன் குறிச்சி ஜல்லிக்கட்டு நடைபெற்று முடிந்திருக்கிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/bvYeB2h

Post a Comment

0 Comments