புதுக்கோட்டை மாவட்டம், முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டியில், மலம் கலக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதுமே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, வெள்ளனூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும், குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்பட்டவில்லை. இந்த நிலையில், குடிநீரில் மலம் கலந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தனர்.
இதையடுத்து, திருச்சி சரக டி.ஐ.ஜி சரவணசுந்தர் தலைமையில், புதுக்கோட்டை டி.எஸ்.பி ரமேஷ்கிருஷ்ணன் உட்பட இரண்டு டி.எஸ்.பிகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 4 எஸ்.ஐ என 11பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக சம்மந்தப்பட்ட கிராமத்தில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான், சந்தேகத்தின் அடிப்படையில், வேங்கைவயல் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட அதே ஊரைச் சேர்ந்த சுமார் 10 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
அவர்கள் அனைவரும், 11 பேர் கொண்ட விசாரணைக் குழுவினரிடம் ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரியிருந்தனர். இந்த நிலையில், சம்மன் கிடைத்த அனைவரும், வெள்ளனூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சுமார் 5 மணி நேரங்களுக்கும் மேலாக தொடர் விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பாக, மேலும் சிலருக்கு சம்மன் அனுப்ப இருப்பதாகவும் கூறப்படுகிறது. முட்டுக்காடு ஊராட்சி மன்றத் தலைவர், கவுன்சிலர், குடிநீர் ஆப்ரேட்டர்கள் உட்பட மொத்தமாக 70 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இதில், வேங்கைவயல் அல்லாது அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, போலீஸார் கூறும்போது, "தொட்டியில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரி ஆய்விற்காக, சென்னை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக, இதுவரையிலும் கிட்டத்தட்ட 70 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றிருக்கிறோம். விசாரணையானது ஒளிவு மறைவு ஏதும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வருகிறது. குற்றவாளிகளை இன்னும் ஓரிரு நாட்களில் கைது செய்வோம்" என்றனர்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/nZQt05w
0 Comments