தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில், 'ரூபாய் 8,000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்களின், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என அ.தி.மு.க ஆட்சியில் பல ஆண்டுகளாக போராடி வருகிறார்கள். அத்தகைய 20 ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று தி.மு.க ஆட்சியில் அவர்களுக்கு மற்ற ஆசிரியர்களுக்கு வழங்குவது போல் காலம் வரை ஊதியம் வழங்கும்’ என்று தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், சென்னையில் பகுதி நேர ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை டி.பி.ஐ வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டன.
அதைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை செயலாளர் மற்றும் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அது தோல்வி அடைந்தது. இந்த நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடிவரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக, நிதித்துறை செயலாளரின் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து, இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது" என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து சென்னை டி.பி.ஐ வளாகத்தில் நடந்து வரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றிருக்கின்றனர்.
from Latest News https://ift.tt/kYefJnK
0 Comments