ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட் வளாகத்தில் மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. நாள் ஒன்றுக்கு 300 டன் எரிவாயு நிரப்பப்பட்டு, அந்த சிலிண்டர்கள் கோவை, கரூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஆலையில் ஷிஃப்ட் அடிப்படையில் 200 ஒப்பந்த தொழிலாளர்களும், 50 தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த ஆலையில் எரிவாயு சிலிண்டர்களை நிரப்பும் பணியில் சேலம் மாவட்டம், ஆத்தூர், தம்மம்பட்டியைச் சேர்ந்த ராஜூ மகன் சரவணன் (25) என்பவர் ஈடுபட்டிருந்தார். அவர் 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரில் எரிவாயு நிரப்பி விட்டு அதை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். அப்போது அவருடன் பணிபுரிந்து சக ஊழியர்களான அருள், ஜெகன், ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
விபத்து குறித்து தொழிற்சாலை நிர்வாகத் தரப்பில் கூறுகையில்,
``தினமும் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறு சுழற்சி செய்வதற்காக இரண்டு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு பழுது ஏற்பட்ட சிலிண்டர்கள் மீண்டும் சரி செய்யப்பட்டு கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட ஒரு சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் போது ஏற்பட்ட இந்த விபத்து ஏற்பட்டது” என்றனர்.
19 கிலோ சிலிண்டரில் எரிவாயு நிரப்பும் பணியில் சரவணன் ஈடுபட்டிருந்தபோது, சிலிண்டரின் கீழ் பக்கம் தனியே கழன்று விட, சிலிண்டரின் மேல் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக தனியே சிதறி சரவணனின் நெஞ்சில் பட்டு தெறித்து போய் விழுந்தது. இதனால் படுகாயமடைந்த சரவணன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
விபத்து நடந்த இடத்தின் அருகே எரிவாயு குழாயும், தண்ணீர் செல்லும் குழாயும் அருகருகே உள்ளது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சிலிண்டரின் ஒரு பகுதி தாக்கியதில் தண்ணீர் குழாய் மட்டும் உடைந்து தண்ணீர் வெளியேறியது. ஒருவேளை அருகிலிருந்த எரிவாயு குழாய் உடைபட்டு இருந்தால் பெரும் தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விபத்து குறித்து பெருந்துறை போலீஸார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகளும் துறை ரீதியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
from Latest News https://ift.tt/Z8YqCmQ
0 Comments