டெல்லி: நள்ளிரவில் பீர்பாட்டிலால் தாக்கி கொள்ளை முயற்சி... எதிர்த்துப் போராடிய ஊபர் பெண் டிரைவர்!

டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதனால் டெல்லி பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரம் என்ற எண்ணம் நிலவி வருகிறது. இந்நிலையில் மேலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. டெல்லியில் ஊபர் டாக்சி ஓட்டுபவர் பிரியங்கா. டெல்லி சமயபூர் பகுதியில் வசிக்கும் பிரியங்கா நேற்று இரவு வாடிக்கையாளர் ஒருவர் அழைத்ததால் தனது காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டார். கார் வெளிமாநில பஸ்களை நிறுத்தும் டெர்மினஸ் இருக்கும் காஷ்மெரா கேட் நோக்கி சென்று கொண்டிருந்தது. இரவில் கடுமையான பனிமூட்டம் இருந்ததால் பிரியங்கா காரை மிகவும் மெதுவாக ஓட்டினார். கார் வாடிக்கையாளர் அருகில் சென்ற போது பிரியங்கா காரின் முன்பக்கமாக வந்த இரண்டு பேர் காரை நோக்கில் கல் வீசினர். அந்த கல் காரின் கண்ணாடியை தாக்கியது. அந்த கல் பிரியங்காவின் தலையிலும் பட்டது. அதோடு காரின் உடைந்த கண்ணாடி பிரியங்காவின் உடலையும் தாக்கியது.

உடனே என்னவென்று பார்ப்பதற்காக பிரியங்கா காரில் இருந்து இறங்கி வந்தார். கல் வீசிய அவர்கள் பிரியங்காவிடம் வந்து அவரின் மொபைல் போனை பிடுங்க முயன்றனர். ஆனால் போராடி அந்த போனை அவர்களிடம் கொடுக்காமல் காப்பாற்றிக்கொண்டார். ஆனால் பிரியங்காவிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டனர். இது குறித்து பிரியங்கா கூறுகையில், ``என்னை தாக்கிய இரண்டு பேரும் என்னிடம் இருந்த கார் சாவியை பிடுங்க முயன்றனர். ஆனால் கார் என்னுடையது கிடையாது என்று அவர்களிடம் தெரிவித்தேன். அதோடு உதவி கேட்டுக்கத்தினேன். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு பேரும் தங்களிடமிருந்த பீர் பாட்டிலால் எனது கழுத்து மற்றும் நெஞ்சுப்பகுதியில் தாக்கினர்.

கழுத்தில் ரத்தம் வந்து கொண்டிருந்தது. ரத்தம் வராமல் இருக்க துணியால் கழுத்தை மறைத்துக்கொண்டு ஊபர் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். அந்த வழியாக சென்ற வாகனத்தை நிறுத்தி உதவி கேட்க முயன்றேன். ஆனால் எந்த வாகனமும் நிறுத்தவில்லை. அரை மணி நேரம் கழித்து போலீஸார் வந்து என்னை மருத்துவமனையில் சேர்த்தனர்” என்றார். மருத்துவமனையில் பிரியங்காவிற்கு கழுத்தில் 10 தையல் போடப்பட்டுள்ளது. பிரியங்கா தன்னை தாக்கியவர்கள் மீது புகார் கொடுக்க மறுத்துவிட்டார். ஆனாலும் போலீஸார் தாங்களாக வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.



from Latest News https://ift.tt/yGVsKdl

Post a Comment

0 Comments