``இன்னொரு மொழி கற்றுக் கொள்வதை தடுக்க வேண்டாம்; ஏனெனில்...”- துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

``தேசியக் கல்விக் கொள்கையில், தமிழை தாய்மொழியாகவும், இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகமாகவும் கிடைக்கும். தமிழில் இவ்வளவு பெருமைகள் இருக்கின்றன என்பதை மற்ற மொழிக்காரர்களிடம் சொல்வதற்காக இன்னொரு மொழி கற்றுக் கொள்வதைத் தடுக்க வேண்டாம்” என திருவையாறில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், ஜி.கே.வாசன்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகள் முக்தியடைந்ததார். அவர் முக்தியடைந்த நாளில், ஆண்டுதோறும் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் பஞ்சரத்தின கீர்த்தனையில் பிரபல இசை கலைஞர்கள் உள்ளிட்ட பலர் தியாகராஜர் சமாதி அமைந்துள்ள இடத்தில் அமர்ந்து இசை அஞ்சலி செலுத்துவர்.

இந்நிலையில் இந்தாண்டு 176-வது ஆராதனை விழாவுக்கான ஏற்பாடு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், தியாகப்பிரும்ம சபாவின் தலைவருமான ஜி.கே.வாசன் தலைமையில் செய்யப்பட்து. இவ்விழா வரும் 11ம் தேதி வரை ஆறு நாட்கள் நடைபெறுகிறது. பஞ்சரத்தின கீர்த்தனையில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ சத்குரு தியாகராஜர்

நேற்று மங்கள இசையுடன் தொடங்கிய விழாவை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் தியாகப்பிரும்ம சபாவின் செயலாளரான அரித்துவாரமங்கலம் பழனிவேல், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், தமிழிசை செளந்தரராஜன் பேசியதாவது, ``தமிழிசை தெலுங்கு பேசலாம். தெலுங்கு பேசும் நண்பர்கள் தமிழும் பேசலாம். இப்படியான சூழல் தமிழகத்தில் இருக்க வேண்டும். தியாக பிரம்மம் ஆந்திர மாநிலத்தில் இருந்து இங்கு குடியமர்ந்து, தெலுங்கும், வட மொழியும் கற்றுக் கொண்டு, தமிழகத்தில் இருந்தார். திருவையாறுக்கு என பல பெருமைகள் உள்ளன. நாம் இப்போது விஞ்ஞானத்தில் கண்டுபிடித்ததை அன்றே மெய்ஞானத்தால் திருவையாறில் நடந்துள்ளது.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை

வால்மீகியின் வழித்தோன்றலாக தியாகபிரம்மத்தை கூறுகின்றனர். கம்பர் வடமொழியைக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், கம்பராமாயணம் நமக்குக் கிடைத்திருக்காது. தேசியக் கல்விக் கொள்கையில் தமிழை தாய்மொழியாகவும், இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்ளும் வாய்ப்புகளும் அதிகமாகக் கிடைக்கும். தியாகபிரம்மம் தமிழகத்தில் அமர்ந்து கொண்டு தெலுங்கு கீர்த்தனைகளை பாடி உலகம் முழுவதுமுள்ள இசை ரசிகர்களை ஈர்த்தார். இதன் மூலம் மொழியின் வல்லமையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நம் தமிழில் இவ்வளவு பெருமைகள் இருக்கின்றன என்பதை மற்ற மொழிக்காரர்கள் சொல்வதற்காக இன்னொரு மொழி கற்றுக் கொள்வதைத் தடுக்க வேண்டாம்.

தமிழ் நமக்கு உயிர் தான். ஆனால் மற்ற மொழிகளைக் கற்கவும், மதிக்கவும் வேண்டும். இன்னொரு மொழியைக் கற்கும் போதுதான் தமிழ் மொழியில் உள்ள நல்லவற்றை வட மொழிக்காரர்களுக்கு எடுத்துச் சொல்ல முடியும். வடக்கும், தெற்கும் இணைந்து பணியாற்றினால்தான் இந்த நாடு சுபிட்சமாக இருக்கும். தமிழையும், ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது. நாம் அனைத்து மதங்களையும் துதிக்கவும், மதிக்கவும் வேண்டும். அந்தந்த மதத்திலுள்ள நல்லவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தியாகராஜர் ஆராதனை விழா

இது தான் நமது கொள்கையாக இருக்க வேண்டும். சில இடங்களில் காவி உடையில் வருபவர்கள் உள்ளே வராதீர்கள் என்றும், வெள்ளை உடை அணிந்து வருமாறும் கூறுகின்றனர். அந்தந்த நிறத்தை உடையவர்களை அந்த நிறத்திலேயே விட்டுவிட வேண்டும். எந்த மதமாக, இயக்கமாக, ஜாதியாக இருந்தாலும் அனைவரும் சமமாக வாழ வேண்டும்.

பாடல்களுக்கும், ராகங்களுக்கும் நோய்களைத் தீர்க்கும் சக்தி உள்ளது. தோடி ராகத்துக்கு மன நலத்தைச் சரி செய்யக்கூடிய குணம் உள்ளது. மோகனம் சந்தோஷத்தையும், சிவரஞ்சனி சோகத்தையும் தருகிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ராகங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால், நோயாளி இயல்பு வாழ்க்கைக்கு விரைவாகத் திரும்புவார் என மருத்துவ உலகில் கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு கீர்த்தனைகளையும், ராகங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/1tmNzOd

Post a Comment

0 Comments