நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.1,33,00,000 மதிப்பீட்டில் அங்கன்வாடி, கான்கிரீட் சாலை, கால்வாய் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு பூமி பூஜை போடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தத் திட்டப் பணிகளை முன்னாள் அமைச்சரும், குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ-வுமான தங்கமணி தொடங்கி வைத்தார். இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ``தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறவேண்டுமெனக் கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன் பிறகே தற்போது அந்த பரிசுத் தொகுப்பில் கரும்பு சேர்ந்திருக்கிறது.
ஆனால், தற்போது இடம் பெற்றிருக்கும் கரும்பு கொள்முதலுக்கு அறிவித்திருக்கும் 33 ரூபாய் விலையை இடைத்தரகர்கள் இடையூறு இன்றி விவசாயிகளுக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் அதிகம் செங்கருப்பு பயிர் செய்யப்பட்டிருக்கிறது. வருடாவருடம் இங்கிருந்துதான் அதிக கரும்பு கொள்முதல் செய்வார்கள். ஆனால், இந்த முறை குறைவாக கொள்முதல் செய்யவிருப்பதாக தகவல் வந்திருக்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் வந்து பார்த்துச்சென்றிருக்கிறார். ஆனால், விவசாயிகள் கடந்தமுறை வாங்கியதுபோல் அதிக கரும்புகளை அரசு வாங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கின்றனர். தமிழகத்தில் இலவச வேட்டி, சேலை உற்பத்திக்காக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் நூல் தரமற்ற முறையில் இருக்கிறது. இதன் மூலம், நெசவாளர்கள் உற்பத்தி செய்வதில் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால், இலவச வேட்டி, சேலை உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில், இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான உத்தரவு ஆணை காலதாமதமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து அ.தி.மு.க-வினர் மீது வழக்கு போடப்பட்டு வருவது குறித்து அந்த மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அமைப்புச் செயலாளர் ஜெயக்குமாரும் டி.ஜி.பி-யை நேரடியாகச் சந்தித்து மனு கொடுத்திருக்கிறார்கள். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். பொதுவாக, தொண்டர்கள் ஆதரவு உள்ளவர்கள் தங்களுக்கு உள்ள ஆதரவாளர்கள் குறித்து வெளியே தெரிவிக்கமாட்டார்கள். ஆனால், ஓ.பி.எஸ் தனக்கு ஆதரவாக உள்ளவர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக, அவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து, நடைபெறவுள்ள இ.பி.எஸ் வாதத்தின்போது, சிறப்பாக வாதங்களை முன்வைத்து வெற்றி பெற்று, இ.பி.எஸ் பொதுச்செயலாளராக வருவார்" என்று கூறிய தங்கமணியிடம்,
'அ.தி.மு.க கட்சியின் அடிப்படை விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது' குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, "உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில், அது பற்றி கருத்துகூற விரும்பவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடைபெற்றுள்ளது" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/ihryM50
0 Comments