விழுப்புரம்: அரசுப் பள்ளி வாசலில் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு; சொத்து பிரச்னை காரணமா?

விழுப்புரம் மாவட்டம், கோலியனூரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் நடராஜ். அரியலூர் மாவட்டம், கோடங்குடி கிராமத்தை சேர்ந்த இவர், கடந்த 10 வருடங்களாக கோலியனூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் குடும்பத்தில் 4 ஆண்கள், 2 பெண்கள் என சகோதர, சகோதரிகள் மொத்தம் 6 பேராம். இவர்தான் 5-வது நபராம். 

லேசான காயமடைந்த 3 மாணவர்கள்

இவர்கள் அனைவருக்கும் பொதுவாக 6 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. மேலும், நடராஜின் மூத்த அண்ணன் ஸ்டாலினுக்கு குழந்தை இல்லாததால், அவருக்கு நிலத்தில் பங்குதர வேண்டாம் என நடராஜ் மற்றவர்களிடம் கூறியதாகவும், இதன்மூலம் பிரச்னை இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு, தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற ஆசிரியர் நடராஜ், மதிய உணவு இடைவேளையின்போது பள்ளியைவிட்டு வெளியேற முயன்றுள்ளார்.

அப்போது, பள்ளியின் வாயில் அருகே வந்த அவரின் அண்ணன் ஸ்டாலின், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு நடராஜின் கையிலும், முதுகிலும் வெட்டியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பள்ளி மாணவர்கள் சிலர், அவர்களை தடுக்க முயன்றுள்ளனர். அப்போது 3 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வெட்டுக் காயமடைந்த ஆசிரியரை மீட்ட சக ஆசிரியர்கள், அவரை உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த வளவனூர் காவல்துறை அதிகாரிகள், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்

அதனைத் தொடர்ந்து, ஆசிரியரை வெட்டிய ஸ்டாலினை கைதுசெய்த போலிஸார், 295(b), 324, 506(2) ஐ.பி.சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்னையின் காரணமாக சொந்த அண்ணனே, ஆசிரியரான தம்பியை பள்ளி வாசலில் வைத்து அரிவாளால் வெட்டிய சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது



from Latest News https://ift.tt/B3EYw8p

Post a Comment

0 Comments