``ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது” - சத்ருகன் சின்ஹா கருத்தால் திரிணாமுல் ஷாக்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை நடத்தி வரும் பாரத் ஜோடோ யாத்திரை இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த யாத்திரையை பாஜக ஆரம்பத்தில் இருந்தே கிண்டல் செய்து வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சத்ருகன் சின்ஹா ராகுல் காந்தியின் யாத்திரையை பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ``ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை புரட்சிகரமான ஒன்றாகும். இந்த யாத்திரை மூலம் இளைஞர்களின் அடையாளமாக ராகுல் காந்தி உருவெடுத்துள்ளார்.

நாடு இதற்கு முன்பு இது போன்ற ஒரு யாத்திரையை கண்டதில்லை. அவரின் நோக்கம் நல்லது. ராகுல் காந்திக்கு பிரதமராகும் தகுதி இருக்கிறது. ராகுல் காந்தியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரதமராக பணியாற்றி நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார். சத்ருகன் சின்ஹாவின் இக்கருத்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் கூட சேர்த்துக்கொள்ள மறுத்து வருகிறார். அப்படி இருக்கையில், ராகுல் காந்தியை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. பாராட்டி இருப்பது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், ``சத்ருகன் சின்ஹா வெளியிட்டுள்ள அறிக்கைக்கும் கட்சிக்கும் தொடர்பு கிடையாது. அது அவரின் தனிப்பட்ட கருத்து. அனைத்துக்கட்சிகளும் கலந்து ஆலோசித்த பிறகு பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவேண்டும். காங்கிரஸ் முதலில் தனது கட்சியை ஒன்று சேர்க்கவேண்டும். கட்சி உடைவதை தடுக்கவேண்டும். பாஜக எதிர்ப்பு கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு பிரதமர் யார் என்பது குறித்து முடிவு செய்யும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்ருகன் சின்ஹா ஆரம்பத்தில் பாஜக-வில் இருந்தார். பின்னர் அவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



from Latest News https://ift.tt/pPrOtlf

Post a Comment

0 Comments