Doctor Vikatan: குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் நிகழும் என்று சொல்லப்படுவது உண்மையா? மற்ற நாள்களைவிட குளிர்காலத்தில் இள வயதினரும் ஹார்ட் அட்டாக்கில் உயிரிழப்பதாகவும், அதனால் குளிர்காலத்தில் நடைப்பயிற்சி செய்ய வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துவதாகவும் ஒரு செய்தி பார்த்தேன். இது எந்த அளவுக்கு உண்மை?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
குளிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் பொதுவாக அதிகம்தான். இது இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விஷயம்தான். அமெரிக்காவில் குளிர்காலத்தில் மட்டும் 30 சதவிகிதம் பேருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படி நிகழ காரணங்கள் பல.
அங்கே பனி உறைவு அதிகம். உடலளவில் ஆரோக்கியமாக இல்லாதவர்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது அந்தப் பனி உறைவைத் தகர்க்க முயற்சி செய்வார்கள். அது அவர்களுக்கு மாரடைப்புக்கான ஆபத்தை அதிகரிக்கும். ஏற்கெனவே இணை நோய் உள்ளவர்களுக்கும், இதயம் தொடர்பான வேறு பிரச்னைகள் உள்ளவர்களுக்கும் இதுபோன்ற செயல் மாரடைப்புக்கான ஆபத்தை அதிகரிக்கும்.
குளிர்ச்சியான சூழலில், இதயம் வழக்கத்தைவிட அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். தவிர குளிர்காலத்தில் 'ஆஞ்சைனா' என்ற பாதிப்புக்கும் வாய்ப்புகள் அதிகம். அதாவது இதயத்துக்குப் போதுமான ரத்த ஓட்டம் செல்லாததால் ஏற்படும் பாதிப்பு இது. நடந்தால் நெஞ்சுவலிப்பது போன்று தோன்றும்.
சரி... அப்படியானால் குளிர்காலம் வந்தாலே ஹார்ட் அட்டாக் வந்துவிடுமோ என்ற பயத்துடன்தான் வாழ வேண்டுமா என்று நினைக்க வேண்டாம். குளிர்காலத்தில் வாக்கிங் செல்வோரும், வெளியே செல்வோரும் குளிரைத் தாங்கும்படியான உடைகள் அணிந்து செல்ல வேண்டும். உடலை வார்ம் அப் செய்துவிட்டுக் கிளம்ப வேண்டும். அதீத குளிரில் மட்டும் வெளியே செல்லாமலிருப்பது பாதுகாப்பானது.
சென்னையைப் பொறுத்தவரை மார்கழி மாதத்தில்கூட தாங்கமுடியாத அளவு குளிரை எல்லாம் நாம் உணர்வதில்லை. குளிருக்கும் மாரடைப்புக்கும் பயந்து கொண்டு வீட்டுக்குள்ளேயே முடங்கத் தேவையில்லை.
வருடாந்தர ஹெல்த் செக்கப் செய்து கொள்வது அவசியம். நம்மில் பலரும் புத்தாண்டை ஒட்டி, ஃபிட்னெஸ் குறித்த சபதங்களை எடுப்போம். `நாளை முதல் ஜிம் செல்லப் போகிறேன்.... வாக்கிங் போகப் போகிறேன்' என்றெல்லாம் கிளம்புபவர்கள் பலர். புத்தாண்டு என்பது குளிர்காலத்தில் வருவது.
உடற்பயிற்சியும் உடல் இயக்கமும் ஆரோக்கியத்துக்கு அடிப்படை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வருடக்கணக்கில் உடலுக்கு வேலையே கொடுக்காமல் இருந்துவிட்டு, திடீரென்று உடற்பயிற்சியில் தீவிரமாக இறங்குவது என்பது சரியானதல்ல. வாக்கிங்கோ, ஜாகிங்கோ, ஜிம் பயிற்சிகளோ.... மெள்ள மெள்ள ஆரம்பித்து படிப்படியாக அதிகரிப்பதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/f6qgWbF
0 Comments