Doctor Vikatan: கடந்த வாரம் உடல்நலமின்றி மருத்துவரை அணுகினேன். அவர், மூன்று நாள்களுக்கு ஆன்டிபயாடிக் கொடுத்தார். இரண்டு நாள்களுக்கு அதை எடுத்தும் குணமாகவில்லை என வேறு மருத்துவரைப் பார்த்தேன். அவர் அந்த ஆன்டிபயாட்டிகை நிறுத்தச் சொல்லிவிட்டு மீண்டும் வேறு ஆன்டிபயாடிக் கொடுத்தார். இப்படி வேறு வேறு ஆன்டிபயாட்டிக் எடுப்பதால், ஒன்றை பாதியோடு நிறுத்திவிட்டு வேறு ஒன்றை எடுப்பது சரியானதா?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி.
ஆன்டிபயாடிக் என்பது பாக்டீரியா தொற்றுக்காக கொடுக்கக்கூடியது. சாதாரண சளி, இருமல், சுவாசப்பாதை கோளாறுகள், வயிறு தொடர்பான பிரச்னைகள், சருமப் பிரச்னைகள் போன்றவற்றின் காரணமான பாக்டீரியா கிருமிகளைக் கட்டுப்படுத்தவும், ரத்தத்தில் அவற்றின் பரவலையும் வீரியத்தையும் குறைப்பதற்காகக் கொடுக்கப்படுபவையே ஆன்டிபயாடிக் மருந்துகள்.
உடல்நலம் சரியில்லை என்றதும் உங்களுக்கு மருத்துவர் ஆன்டிபயாடிக் பரிந்துரைத்திருப்பார். ஒவ்வொரு விதமான ஆன்டிபயாடிக்கும் நம் உடலில் ஒவ்வொரு விதமாகச் செயலாற்றும். அந்த வகையில் ஒருசில ஆன்டிபயாட்டிக்குகள் ஒருசில பாக்டீரியா தொற்றுக்குப் பலன் அளிக்காமல் போகலாம் அல்லது அந்த ஆன்டிபயாடிக் மருந்தை உடல் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம்.
அந்த மாதிரி தருணங்களில் ஏற்கெனவே கொடுத்த ஆன்டிபயாட்டிக்கை நிறுத்திவிட்டு வேறு ஆன்டிபயாட்டிக் கொடுப்பது வழக்கம். ஆனால் ஒவ்வொரு ஆன்டிபயாட்டிக் மருந்துக்கும், இத்தனை நாள்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கணக்கு இருக்கிறது. அது 3, 5, 7, 10, 15, 21 என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
வேறு மருந்து மாற்றிப் பரிந்துரைக்க வேண்டிய நிலையில் ரத்தத்தில் கல்ச்சர் டெஸ்ட் செய்து, அதில் எந்தவிதமான கிருமி வளர்ந்திருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியது அவசியம்.
ஏற்கெனவே கொடுக்கப்பட்ட ஆன்டிபயாட்டிக்கால் அந்தக் கிருமி வெளியேறவில்லை, முழுமையாக அழிக்கப்படவில்லை என்ற நிலையில் பிளட் கல்ச்சர் டெஸ்ட்டுக்கேற்ப வேறு ஆன்டிபயாட்டிக் பரிந்துரைப்பதில் தவறில்லை. அப்போதுதான் அந்த நோய் முழுமையாக குணமாகும்.
ஆனால் பரிந்துரைக்கப்பட்ட நாள்களுக்கு அந்த ஆன்டிபயாட்டிக்கை எடுத்துக் கொள்ளாமல், இடையில் நிறுத்திவிட்டு சிறுநீர், ரத்தம், சளிப் பரிசோதனையும் செய்யாமல் வேறு ஆன்டிபயாட்டிக்கை எடுக்க ஆரம்பிப்பது தவறு.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/hy9NszT
0 Comments