Doctor Vikatan: குழந்தையின் உடலில் தேமல்.... மற்ற பாகங்களுக்கும் பரவுமா?

Doctor Vikatan: என் 3 வயதுக் குழந்தைக்கு உடலில் சில இடங்களில் தேமல் போன்று இருக்கிறது. அது என்னவாக இருக்கும்? அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமா? தேமல் உடலில் பரவுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா

நீங்கள் பொதுவாக தேமல் என்று குறிப்பிட்டுள்ள பிரச்னையில் நிறைய வகைகள் உண்டு. சில வகை தேமல் அலர்ஜி தன்மையைக் கொடுக்கும். 'ஏடோபிக் டெர்மடைட்டிஸ்' (Atopic dermatitis) எனப்படும் வகையில் இப்படி அலர்ஜி தன்மையோடு சில குழந்தைகள் பிறப்பார்கள். அந்தக் குழந்தைகளுக்கு முகத்தில் தேமல் வரலாம். அந்தத் தேமல் வெள்ளை நிறத்தில் (Hypopigmented) இருக்கலாம்.

இதைத் தாண்டி சில குழந்தைகளுகு வியர்வையின் காரணமாகவும் தேமல் வரலாம். அந்தக் குழந்தைகளுக்கு அதிகம் வியர்க்கும். அந்த வியர்வையைத் துடைக்காமல், சருமத்திலேயே தங்கிவிடும்போதும், சரியாகக் குளிக்காத நிலையிலும் தேமல் வரலாம்.

எனவே தேமலைப் பொறுத்தவரை அதை நேரில் பார்த்தால்தான் அது எந்தவகையான தேமல், அதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க முடியும். அதற்கேற்ற சிகிச்சையைக் கொடுத்துதான் அதைச் சரியாக்க முடியும். தொற்றின் காரணமாகவும் தேமல் வரலாம். ஃபங்கல் இன்ஃபெக்ஷன் காரணமாக வரும் தேமலை Pityriasis versicolor என்று சொல்வோம். இந்த வகை தேமலும் சரி, வியர்வை காரணமாக வரும் தேமலும் சரி, உடலில் பரவத்தான் செய்யும். இன்ஃபெக்ஷன் ஏற்பட்ட இடத்தைத் தொட்டுவிட்டு, இன்னொரு பகுதியைத் தொடும்போது நிச்சயம் பரவும்.

Skin Care

தவிர தேமலுக்கு சரியான சிகிச்சை கொடுக்காவிட்டாலும் அது உடல் முழுவதும் வரைபடம் மாதிரி பரவிக்கொண்டே போகும். எனவே எந்தவகையான தேமல், அதற்கான காரணம், சிகிச்சை போன்றவற்றை வைத்துதான் அது பரவுமா, பரவாதா என்று சொல்ல முடியும். உங்கள் குழந்தையை சரும மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளைத் தவறாமல் பின்பற்றுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



from Latest News https://ift.tt/HSU3gbP

Post a Comment

0 Comments