Doctor Vikatan: ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த தண்ணீரில் குளிப்பது வெஜைனா ஆரோக்கியத்துக்கு நல்லது என்று கேள்விப்பட்டேன். அது உண்மையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
ஆப்பிளில் இருக்கும் சர்க்கரையுடன் ஈஸ்ட் சேர்க்கும்போது அது நொதித்து ஆல்கஹலாக மாறுவதுதான் ஆப்பிள் சைடர் வினிகர். ஆல்கஹாலுடன் பாக்டீரியா உருவாகும்போது அது அமிலமாக மாறுகிறது.
அமிலம் என்பது வெஜைனா பகுதியைப் பாதுகாக்கக்கூடியது. வெஜைனா பகுதியில் லேக்டோ பேசிலை, ஹைட்ரஜன் பெராக்ஸைடு என்கிற கெமிக்கலை உருவாக்கும் பாக்டீரியா போன்றவை இயற்கையாகவே இருக்கும். வெஜைனா பகுதியின் பிஹெச் என்பது அமிலத்தன்மை வாய்ந்தது. அது அமிலத்தன்மையிலேயே இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் வர வாய்ப்பில்லை. தொற்றும் வராது. அந்தத் தடுப்புசக்தியானது நீங்கும்போதுதான் வெஜைனா பகுதியில் இன்ஃபெக்ஷன் ஏற்படும்.
ஆப்பிள் சைடர் வினிகர் என்பதும் அமிலத்தன்மை கொண்டது என்பதால் அதை உபயோகிப்பது வெஜைனாவுக்கு நல்லது என்ற கருத்து உருவாகியிருக்கிறது. மற்ற வெஜைனல் வாஷ் போல ஆப்பிள் சைடர் வினிகரையும் உபயோகிக்கலாம். ஆனால் இதை தொடர்ந்து உபயோகிக்கலாமா, இதைக் கலந்த தண்ணீரில் குளிக்கலாமா என்றெல்லாம் கேட்டால், தேவையில்லை என்றே சொல்ல வேண்டும்.
மனித உடல்களில் இதைவைத்து எந்த ஆய்வுகளும் நடத்தப்படவில்லை. எனவே இது மனித உடலுக்கு எந்த அளவுக்குப் பொருத்தமானது என்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. சமீப காலமாக ஆப்பிள் சைடர் வினிகர் மிகப் பிரபலமாகப் பேசப்படுகிற ஒன்றாக இருக்கிறது. அதை உபயோகிக்க வேண்டாம் என்பதே மருத்துவராக என் அட்வைஸ்.
வெஜைனா பகுதியை வெதுவெதுப்பான நீர் கொண்டு சுத்தப்படுத்தினாலே போதுமானது. அதே போல வெஜைனா பகுதிக்கு அதிக வாசனையுள்ள சோப்புகளையும் பயன்படுத்த வேண்டாம். வெஜைனல் வாஷ், வாசனை சோப் போன்றவற்றை எல்லாம் உபயோகித்து வெஜைனா பகுதியை அடிக்கடி சுத்தப்படுத்துவதால் அந்தப் பகுதியிலுள்ள நல்ல பாக்டீரியாவை நீங்கள் நீக்குகிறீர்கள். அதன் மூலம் இன்ஃபெக்ஷனுக்கான வாய்ப்பையும் நீங்களே உருவாக்குகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
from Latest News https://ift.tt/Zu5bI4S
0 Comments