தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கனப்பாகுளம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சென்ற இரண்டு கார்களை நிறுத்தி, போலீஸார் சோதனை செய்தனர். அப்போது, ஒரு காரை மட்டும் போலீஸாரால் மடக்க முடிந்தது. மற்றொரு கார் காவல்துறையினருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு, பறந்தது. இந்நிலையில், போலீஸார் மடக்கிய காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த காரில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்ட போலீஸார், திகைத்து நின்றனர். ஆனால், அந்த காரில் இருந்தவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பணநோட்டுகள் அத்தனையும் கள்ள நோட்டுகள் என்பது தெரியவந்தது.
மேலும், இரட்டிப்பு பணம் தருவதாக, நல்ல ரூபாய் நோட்டுக்களை பெற்றுக் கொண்டு, கள்ள நோட்டுகளை பலரிடம் பரிமாறிக் கொண்ட கும்பல் அது என்பதை போலீஸார் தங்கள் விசாரணை மூலம் அறிந்தனர். இதனால், அந்த மோசடிக் கும்பலான, வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரமணியன் (49), சந்தோஷ் (32) சிராஜ்கரீம் (44), வீரபத்திரன் (34), ஜெகதீஷ் (38), ஈரோட்டைச் சேர்ந்த கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், போலீஸாரிடம் இருந்து தப்பிச்சென்ற மற்றொரு காரை மடக்க, சங்கரன்கோயில் டி.எஸ்.பி கதிர் தலைமையிலான போலீஸார் முயன்றனர். அந்த கார் பற்றி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் என்று பலமாவட்ட போலீஸாருக்கு, `கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் அந்த காரில் செல்லும் கும்பல் செல்ல வாய்ப்பிருக்கிறது’ என்ற அடிப்படையில் தகவல் கொடுத்துள்ளனர். அப்படி, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நெடுஞ்சாலை ரோந்து பணி காவலர்கள் உதவியுடன், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடா கோயில் பகுதியில் அரவக்குறிச்சி போலீஸார், செயற்கையான வாகன நெரிசலை உருவாக்கினர்.
அதைத்தொடர்ந்து, சந்தேகத்துக்கிடமான வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்படி அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த காரை மடக்கிய போலீஸார், காருக்குள் இருந்தவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, காருக்குள் தமிழக காவல்துறை சீருடையில் இருந்த நபரை பார்த்ததும் முதலில் அவர் போலீஸ் என்று நம்பிய அரவக்குறிச்சி போலீஸார், அவரிடம், எந்த ஸ்டேஷன், என்ன பதவி என்றெல்லாம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப்பின்னாக தகவல்களை சொல்லியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களிடம் தங்கள் பாணியில் விசாரணையை மேற்கொள்ள, அந்த காரில் வந்தவர்கள், சங்கரன்கோவிலில் தப்பி வந்த அந்த காரில் இப்பவர்கள்தான் என்பதை போலீஸார் அறிந்தனர். இதனால், அந்த காரில் இருந்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வெப்படை என்.சி காலனியைச் சேர்ந்த பூபதி (43), குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன், அதே பகுதியைச் சேர்ந்த அய்யப்பன், வேலாத்தாள்கோயில் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார், அவரின் மனைவி முத்துமாரி, காரை ஓட்டி வந்த டிரைவர் ஞானசேகர் ஆகிய ஆறு நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
இதில் காக்கி சீருடையில் போலீஸ் போல் பாவ்லா காட்டிய பூபதி, போலியாக போலீஸ் அடையாள அட்டையும், அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினர் என்ற அடையாள அட்டையும் வைத்திருந்ததை கண்டறிந்து, அவற்றை பறிமுதல் செய்தனர். போலீஸ், பத்திரிகையாளர் என்ற போலி போர்வையில், இந்த கள்ளநோட்டுத் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த ஆறு பேரையும் கைது செய்த அரவக்குறிச்சி போலீஸார், அவர்களை தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் மாதவனிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில், இந்த கள்ளநோட்டுக் கும்பலை சிறப்பாக மடக்கிப் பிடித்த, அரவக்குறிச்சி காவல் நிலைய காவலர்களுக்கு, கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டுகளை தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/y8pu2hg
0 Comments